
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் செடி, கொடிகளை அகற்றி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்களைப் பாதிக்கக்கூடிய வகையில் உள்ள செடிகள், மரமாக வளர்ந்து அதனுடைய வேர்கள் ஊடுருவுவதால் பாலங்கள் விரிசலடைந்து பழுதடைய வாய்ப்புள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதை முறையாகப் பராமரித்தால் அந்த பாலங்கள் பல ஆண்டுகளுக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இருக்கும். அதனால், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அதிகாரிகள் மேம்பாலங்களை ஆய்வு செய்து, சிறு, சிறு செடிகளாக இருக்கும்பொழுதே அகற்றிவிடவேண்டும். மேலும், சென்னையில் 2015 டிசம்பரில் மழை, வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் சாலை இன்னும் சரிசெய்யப்படாமலே உள்ளது. எனவே, இவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.