
சென்னை வில்லிவாக்கம் ஏரியில் குழந்தைகள் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி நிலையம் உள்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய பசுமைப் பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பயன்பாடின்றி இருந்த இந்த ஏரியை புனரமைத்து, பிரதான நீர்நிலையாக மாற்றவும், சுற்றுப்புற பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக வில்லிவாக்கம் ஏரியில் 27.50 ஏக்கர் நிலத்தில், பசுமைப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. மீதமுள்ள, 11.5 ஏக்கர் நிலம், சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிலம் மாநகராட்சி வசம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பசுமைப் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
கடந்த மே, 9-ஆம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வில்லிவாக்கம் ஏரியில் பசுமைப் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் அடிப்படையில், தற்போது 20 ஆயிரம் கன மீட்டரில் இருந்து 70 ஆயிரம் கன மீட்டராக ஏரியின் கொள்ளளவு உயர்த்தப்படவுள்ளது. இங்கு குழந்தைகள் விளையாட்டுத் திடல், திறந்தவெளி திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையம், ஆவின் பாலகம், வாகன நிறுத்துமிடம், தடுப்பு வேலி ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
ஏரி நீரின் தரத்தைக் கண்காணிக்க நவீன கருவி பொருத்தப்படும். பூங்காவுக்கு வருவோர் அமருவதற்காக 30 இருக்கை வசதிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் கழிப்பறை வசதிகள், எல்.இ.டி., மின்விளக்குகள், குப்பைத் தொட்டி வசதிகள் செய்யப்பட உள்ளன. அதேபோன்று ஏரியில் இருந்து உபரிநீரை, டி.வி.எஸ். கால்வாயுடன் இணைத்து வெளியேற்றவும், ஏரிக்கு வரும் நீரின் தரத்தை அறிய, நீர்வரத்து கால்வாயில், "ஆன்லைன் சென்சார்' பொருத்தவும், முடிவு செய்யப்பட்டது. பசுமைப் பூங்காவுக்கு வருவோர் தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக ஏரியைச் சுற்றி மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் நடப்படவுள்ளன. தற்போது ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துதல், கரையைப் பலப்படுத்துதல் ஆகிய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து நடைபாதை, வாகன நிறுத்தம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.