Enable Javscript for better performance
அழிந்து வரும் அரசு கோப்புகள்: நெருக்கடியில் ஆவணங்கள் பாதுகாப்பு அறை அலுவலர்கள்- Dinamani

சுடச்சுட

  

  அழிந்து வரும் அரசு கோப்புகள்: நெருக்கடியில் ஆவணங்கள் பாதுகாப்பு அறை அலுவலர்கள்!

  By DIN  |   Published on : 06th August 2019 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  INDIALETTER

  நாமக்கல்: அரசுத் துறை, நீதித் துறை, பொதுமக்கள் இணைந்தது தான் ஒரு மாநிலம். மக்களுக்காக, மக்களால் உருவான அரசின் கீழ் 170 - க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இவற்றில் பல துறைகள் மக்கள் சேவைக்காகவும், சில துறைகள் அரசின் நிதி நிலையைச் சரி செய்வதற்காகவும் செயல்படுகின்றன. அனைத்துத் துறைகளிலும் உயர் அதிகாரிகள் முதல் கீழ் மட்ட ஊழியர்கள் வரையில் சுமார் 18 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் நாளொன்றுக்கு 30 முதல் 50 டன் அளவிலான கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை மாகாணமாக இருந்து தமிழகம் மாநிலமாக உருவானபோது, 15 மாவட்டங்கள் வரையே இருந்தன. 1975 - க்குப் பின் அவற்றின் எண்ணிக்கை உயர்ந்து, சில மாதங்களுக்கு முன் வரை 32 எண்ணிக்கையில் இருந்தது. தற்போதைய பட்டியலில் புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அரசு அதிகாரிகளின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
   ஒரு மாவட்டத்தின் தலைமையகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பழைய கோப்புகளைப் பராமரிப்பதற்கென தனிப் பாதுகாப்பு அறை உருவாக்கப்படுகிறது. இவற்றில், மாவட்டம் தொடங்கியது முதல் தற்போதைய காலக்கட்டம் வரையிலான அரசாணைகள், திட்டங்கள் குறித்த அறிக்கைகள், கட்டட வரைபடங்கள், மக்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்தியவை, ஆட்சியரின் ஆய்வுப் பணிகள், அவர் நிறைவேற்றிய நல உதவிகள், அலுவலர்களின் பணி மாறுதல், ஒழுங்கு நடவடிக்கை, மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த முக்கிய ஆவணங்கள், ஊழியர்களின் ஊதியக் கணக்குகள், செலவினங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்குகள் சார்ந்தவை, நாளிதழ் குறிப்புகள் என 20 ஆண்டுகளுக்கு முந்தைய கோப்புகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் உள்ள அலமாரிகளில் கட்டுகளாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
   இவற்றை அவ்வப்போது தூசுத் தட்ட வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கேட்கும் தகவல்களைக் கொடுப்பதற்கும், முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் கேட்கும் புள்ளிவிவரங்கள், தகவல்களை அளிப்பதற்கும் பழைமையான கோப்புகளைப் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முந்தைய கோப்புகளும், பல மாவட்டங்களில் 30, 40 ஆண்டு காலக் கோப்புகளும் உள்ளன. தற்போதைய நிலையில் இவை சரியான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாததால் கோப்புகளின் தாள்கள் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்குகின்றன. வேகமாக காற்று வீசினால் உடைந்திடும் சூழலில் உள்ளன. அதுமட்டுமின்றி, கோப்புகள் பாதுகாப்பு அறை முழுவதும் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதால், அறைகள் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள அலுவலக ஊழியர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஆவணங்களில் ஏதாவது ஒரு பாதிப்பு வந்தாலும், அது அங்கு பணியாற்றும் ஊழியர்களைச் சாரும் என்பதால் அவர்கள் ஒருவித நெருக்கடியிலேயே பணியாற்றுகின்றனர்.
   இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கோப்புகள் பாதுகாப்பு அறை ஊழியர்கள் கூறியது: மாவட்ட அளவிலான கோப்புகள் அறை கண்காணிப்பில் துணை வட்டாட்சியர் நிலையிலோ அல்லது வருவாய் ஆய்வாளர் நிலையிலோ உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவர். அறைக்குள் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். கடந்த சில ஆண்டுகளாக, பழைமையான அரசுக் கோப்புகள் சேதமடைந்து வருகின்றன. உதாரணத்துக்கு 2000-ஆம் ஆண்டு கோப்புகள் வேண்டும் என்றால், அதைத் தேடி எடுப்பதற்குள் மிகவும் சிரமமாகி விடும். ஆண்டு கணக்கிட்டு அலமாரி வைத்திருந்தாலும், நாள்பட்ட தாள்களில் எழுத்துகள் மறைந்தும், அடிப்பகுதி கிழிந்தும், சேதமடைந்தும் இருக்கும். அதை லாவகமாக எடுக்கவில்லையெனில், அனைத்தும் பாழாகிவிடும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில், பழைய ஆவணங்களை குப்பைப் போல் வைத்திருக்காமல், அவற்றை இணைய வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் சென்று விட்டால், அந்தக் கோப்புகளை அகற்ற வேண்டும். ஒரு நாள் இந்த அறைக்குள் நின்று பணியாற்றிவிட்டு வருவதற்குள் தூசு முழுவதும் உடலுக்குள் சென்று விடும். அதனால் தான் மாஸ்க் அணிந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
   - எம்.மாரியப்பன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai