பேரிடர் மேலாண்மை: மீட்பு-தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ரூ.160 கோடி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பேரிடர் மேலாண்மையின் ஒரு பகுதியாக மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ரூ. 160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மையின் ஒரு பகுதியாக மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ரூ. 160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
 பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்று பேரிடர் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
 மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து, தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் "புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம்' குறித்து பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பயிற்சி ஒத்திகைகள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடத்தப்பட்டன.
 இதன் ஒரு பகுதியாக சென்னைத் தீவுத் திடலில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சி குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயகுமார், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 ஏற்கெனவே சுனாமிக்காக ஒரு ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுபோல இப்போது பேரிடர் மேலாண்மைக்காக ஒத்திகைப் பயிற்சி நடத்தப்படுகிறது. இது, முழுவதுமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
 இந்த ஒத்திகைப் பயிற்சி மூலம் பொதுமக்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்கள் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான திறன்களை வளர்க்கும். அதோடு, ஒத்திகைப் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களின் செயல்திறனை மறு ஆய்வு செய்ய இந்தப் பயிற்சி உதவி செய்கிறது.
 குறிப்பாக, பேரிடர்களை எதிர்கொள்ள மாநிலத்தின் தயார் நிலையை ஆய்வு செய்யவும், சிறந்த நடைமுறைகள் மற்றும் பலவீனங்களைக் கண்டறியவும், ஆதாரங்கள், அமைப்பு மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியவும் இந்த ஒத்திகைப் பயிற்சி உதவும்.
 இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு, எண்ணெய் நிறுவனங்களின் தொடர் சேவையை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
 மேலும், தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வாரியம், கடலோரக் காவல்படை, காவல்துறை, தீயணைப்புத் துறை, எனத் தொடர்புடைய பல்வேறு துறைகளுக்கு இதுவரை ரூ.160 கோடியே 31 லட்சம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com