வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்பு: அம்மா உணவகங்களில் விரைவில் புதிய வகை உணவுகள்

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்யும் வகையில் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சுவை, விரும்பும் உணவு போன்ற விவரங்கள்

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்யும் வகையில் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சுவை, விரும்பும் உணவு போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
 சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை, கருவேப்பிலை சாதம், இரவில் சப்பாத்தி- பருப்பு கடைசல் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
 தினம்தோறும் 3.5 லட்சம் பேர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். மாநகராட்சி சார்பில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டாலும் வருவாயை விட பல மடங்கு செலவு அதிகம். இதேபோல், அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தபோதும் ஒரே மாதிரியான உணவு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, ஒரே மாதிரியான உணவு வகைகளை மாற்றி, வாடிக்கையாளர்களைக் கவர புதிய உணவு வகைகளை வழங்குவது, காபி, டீ போன்றவற்றை விற்கவும் மாநகராட்சி திட்டமிட்டது.
 இந்தநிலையில், அம்மா உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் புதிய வகை உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், அவர்களின் கருத்தைக் கேட்டு பதிவு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
 இதற்காக, ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பதிவு செய்ய பதிவேடு கொடுக்கப்பட்டுள்ளது. சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் அதில், தங்களின் பெயர், தொழில், உண்ணும் உணவின் அளவு ஆகியவை குறித்து பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று வேறு எந்த உணவு வகைகளை சுவையாகவும் இட்லி தவிர பூரி உள்பட வேறு எதை கொடுத்தால் சாப்பிட பிடிக்கும் என்பது குறித்து பதிவு செய்யவும் கூறப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது: பெரும்பாலும் அம்மா உணவகங்களுக்கு சர்க்கரை நோயாளிகளும், முதியவர்களும் அதிகமாக வருகிறார்கள்.
 எனவே, எண்ணெய் வகையிலான உணவுகள் அம்மா உணவகங்களில் தவிர்க்கப்படுகின்றன. தற்போது புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன்படி, உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை கட்டாயம் பதிவு செய்து வருகிறோம். படிக்க, எழுத தெரியாத வாடிக்கையாளர்களிடம் நாங்களே அவர்களின் கருத்துகளை கேட்டு பதிவு செய்துகொள்கிறோம் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com