வேலூர் மக்களவைத் தொகுதியில் 72 சதவீத வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 
வேலூர் மக்களவைத் தொகுதியில் 72 சதவீத வாக்குப்பதிவு

கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை (ஆக 5) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு தொடங்கியதும் வேலூரில் உள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வாக்களித்தார். 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,553 வாக்குச்சாவடிகளில் 1,600 துணை ராணுவத்தினர் உள்பட 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த தேர்தலில் ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி), டி.எம்.கதிர்ஆனந்த் (திமுக) என மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர், மொத்தம் 14,32,555 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் வாக்காளர்கள் ஆவர். பதிவான வாக்குகள் வரும் 9 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.  

இந்நிலையில், மொத்தம் 72 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

இத்தேர்தலில் மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு பணிகளில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

பதற்றமானவை என கண்டறியப்பட்ட 179 வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்கள் 210 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த வாக்குச்சாவடிகள் மட்டுமின்றி கூடுதலாக 497 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com