அண்ணாமலைப் பல்கலை. வேளாண் புலத்துக்கு ஐசிஏஆர் அங்கீகாரம்: துணைவேந்தர் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புலத்துக்கு ஐசிஏஆர் (இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்) அங்கீகாரம்
வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வில்  முதலிடம் பெற்ற மாணவி எம்.எஸ்.ஜெயப்பிரியாவுக்கு அனுமதி சேர்க்கைக்கான ஆணையை வழங்குகிறார் துணைவேந்தர் வே.முருகேசன். 
வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வில்  முதலிடம் பெற்ற மாணவி எம்.எஸ்.ஜெயப்பிரியாவுக்கு அனுமதி சேர்க்கைக்கான ஆணையை வழங்குகிறார் துணைவேந்தர் வே.முருகேசன். 


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புலத்துக்கு ஐசிஏஆர் (இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்) அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் தெரிவித்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் வேளாண்புல படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வுக்கு மொத்தம் 1,129 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 161 மாணவ, மாணவர்கள் பங்கேற்று அனுமதி சேர்க்கை பெற்றனர். பொதுப் பட்டியலில் அனைத்து இடங்களும் நிரம்பின. வகுப்பு வாரியாக மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது.
பொதுப் பட்டியல் கலந்தாய்வில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி எம்.எஸ்.ஜெயப்பிரியா190.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த மாணவி எஸ்.ஜெயமணி 189.5 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி டி.கலைமணி 186.5 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 5 பேர் அனுமதி சேர்க்கை பெற்றனர். கலந்தாய்வு 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாள் கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அனுமதி சேர்க்கைக்கான  ஆணைகளை, துணைவேந்தர் வே.முருகேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன், வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த், அனுமதி சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் துணைவேந்தர் வே.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்புலம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. நிகழாண்டு ஐசிஏஆர் தர வரிசைப் பட்டியலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை, வேளாண் முதுநிலை பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் பட்டப் படிப்புகளுக்கு முதன்முதலாக ஐசிஏஆர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனிமேல் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வேளாண் மாணவிகள் இந்திய அளவிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வி பயிலவும் எந்த இடையூறும் இருக்காது.
இதேபோல, பொறியியல் துறைக்கும் என்பிஏ அங்கீகாரம் கிடைக்கவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நாக் (தேசிய தர வரிசை பட்டியல்) அங்கீகாரம் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com