பி.எட். கலந்தாய்வு: நாளை தொடக்கம்

இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஆக.7) தொடங்கப்பட உள்ளது.


இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஆக.7) தொடங்கப்பட உள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ள இந்தக் கலந்தாய்வில், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2,040 பி.எட். இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 19 முதல் 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. இதில் 3,800 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். அதில் மூன்று விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, மற்ற அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவர்களுக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 7-இல் தொடங்கி 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், பி.இ. - பி.டெக். மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, 8-ஆம் தேதி தமிழ், மனை அறிவியல், பொருளாதாரம், வணிகவியல், ஆங்கிலம் பாடப் பிரிவினருக்கும், 9-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 10-ஆம் தேதி இயற்பியல், வரலாறு, புவியியல் பாடப் பிரிவுகளுக்கும், 11-இல் வேதியியல், கணிதம் (மாணவர்களுக்கு மட்டும்) பாடப் பிரிவுகளுக்கும், 13-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவு மாணவிகளுக்கான சேர்க்கையும், எஞ்சியுள்ளவர்களுக்கான சேர்க்கையும் நடத்தப்பட உள்ளது. வரும் 12-ஆம் தேதி பக்ரித் பண்டிகை என்பதால், அன்றைய தினம் கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
61 பி.இ. மாணவர்கள்: பி.எட். சேர்க்கையில் பொறியியல் பட்ட மாணவர்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 71 பி.எட். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சேர 61 மாணவ, மாணவியர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
வகுப்புகள் ஆக.19-இல் தொடக்கம்: ஒட்டுமொத்த கலந்தாய்வு முடிந்த பின்னர், பி.எட். முதலாமாண்டு வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com