அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்:  எமிஸ் விவரங்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்:  எமிஸ் விவரங்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  
 இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு வழங்கப்பட வேண்டும். 
சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண் விவரங்கள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய (எமிஸ்) விவரங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். 
 மாணவர்களுக்கான ஆதார் பதிவுப் பணிகளைச் சிறப்பாக தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் கணினி விவரப் பதிவாளர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற வட்டார வள மையத்துக்கு ஒன்று வீதம் ஆதார் பதிவுக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஆதார் பதிவு மேற்கொள்ள தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன. வட்டார வள மைய கணினி விவரப் பதிவாளர்களும் ஆதார் பதிவு செய்யும் கருவியை இயக்கி, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், மாணவர்களின் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைச் சேகரித்து, விவரங்களை ஆதார் கருவி மூலம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட காலவரைக்குள் ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
கட்டணம் பெறக் கூடாது: ஆதார் எண் சம்பந்தப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால்,  அந்தந்த  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி செய்யப்பட வேண்டும். மேலும், ஆதார் எண் பதிவு செய்த பின்பு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் பதிவு செய்யப்பட்டமைக்கான ரசீது அளிக்கப்பட வேண்டும். 
ஆதார் பதிவு, பள்ளி வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். புதிய ஆதார் எண் பதிவுக்கு மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் பெறக்கூடாது.
மாணவர்களின் ஆதார் எண் பதிவில் மாணவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், மாற்றம் செய்து ரூ.50 கட்டணமாக வசூல் செய்யலாம்.  
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது. பிற பொதுமக்களுக்கு இம்மையங்களில் சேவை அளிக்கக்கூடாது.
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்:  விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு புறம்பாகவோ பதிவுகள் மற்றும் மாற்றங்கள் செய்யும் பணிகள் ஏதேனும் செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண் பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் சரிபார்த்தபடி மாணவர்களை ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்து வந்து ஆதார் எண் பதிவு செய்திட வேண்டும். ஆதார் பதிவுப் பணிகளை துரிதமாக செய்யும் வகையில் மாவட்ட அளவில் ஆதார் பதிவு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தவும், அந்த குழுவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com