பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல்: 16 புகார்கள் மட்டுமே பதிவு

பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு இதுவரை 16 புகார்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு இதுவரை 16 புகார்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தப் புகார்களும் கல்விக் கட்டணம் தொடர்பாக அல்லாமல், விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் தொடர்பான புகார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படித்து முடித்தவுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பொறியியல் படிப்புகள் மீது குறிப்பாக, பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் போன்ற படிப்புகள் மீது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இதனால், இந்தப் படிப்புகளில் இடமளிக்க ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை நன்கொடைகளை தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வசூலித்து வந்தன. 
இந்தக் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக தொடர் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன.
இந்தச் சூழலில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மென்பொருள் நிறுவனங்களின் நிலைமை மோசமடைந்தது. ஊதியக் குறைப்பு, ஆள்குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. இதனால், மாணவர் சேர்க்கையும் படிப்படியாகக் குறைந்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடித்ததால், நன்கொடைகளின் அளவை சுயநிதி கல்லூரிகள் குறைத்ததோடு, மாணவர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளையும் அளிக்கத் தொடங்கின. இதனால், கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களும் குறைந்தன. அதுபோல, இந்த ஆண்டும் பொறியியல் மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கி விட்ட நிலையில், இதுவரை 16 புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொறியியல் கூடுதல் கட்டண வசூல் புகார் குழு தலைவர் அருளரசு கூறியது:
இதுவரை 16 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. அதுவும் கல்விக் கட்டணம் தொடர்பாக புகார்கள் எதுவும் வரவில்லை. விடுதி, போக்குவரத்துக் கட்டணம் தொடர்பான புகார்கள் மட்டுமே வருகின்றன. கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்கள் மீது மட்டுமே இந்தக் குழு நடவடிக்கை எடுக்க முடியும். 
24 கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்வு: பொறியல் கல்லூரிகளில் எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விவரம் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 24 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் பிற பொறியியல் கல்லூரிகளுக்கு உள்ளதுபோல அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ. 55,000 ஆண்டுக் கட்டணமும், அங்கீகாரம் இல்லாத படிப்புக்கு ரூ. 50,000 ஆண்டுக் கட்டணமும் வசூலிக்க வேண்டும்.
ஆனால், இந்தக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட படிப்புக்கான ஆண்டு கட்டணம் ரூ.1,25,000 என்ற அளவிலும், அங்கீகரிக்கப்படாத படிப்புக்கான ஆண்டு கட்டணம் ரூ. 1,20,000 என்ற அளவிலும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் ஏற்கெனவே உள்ளதுபோல அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ.87,000 ஆண்டுக் கட்டணமும், அங்கீகாரம் இல்லாத படிப்புக்கு ரூ. 85,000 ஆண்டுக் கட்டணமும் வசூலிக்க வேண்டும். இந்த நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம்  வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம். புகார்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவும், 7598728698, 044 - 2351019 என்ற எண்களில் தொடர்புகொண்டும் தெரிவிக்கலாம்.  
மேலும், தன்னிச்சையாக இதுவரை 2 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். விரைவில் பிற பொறியியல் கல்லூரிகளிலும் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com