
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் முன்னறிவிப்பின்றி உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், ஒரே உறுப்பினரை மட்டும் கொண்ட மதிமுகவின் சார்பாக வைகோ பேசுவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டார். இதைப் பார்த்த அமித் ஷா, "வைகோவின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருக்கிறோம். அவரை அனுமதியுங்கள்' என்று பரிந்துரை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வைகோ பேசினார். இப்படி பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு, வைகோவிடம் நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது.
சுப்பிரமணிய சுவாமியையும், பிரதமர் மோடியையும் சந்திக்கிறார். பாஜகவின் ஆதரவாளர் என்ற முத்திரையைத் தவிர்ப்பதற்காக மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார். இதன் மூலம் வைகோவின் அரசியல் சந்தர்ப்பவாதம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
வைகோவின் அரசியல் பாதையைக் கூர்ந்து கவனிப்பவர்கள், அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதைப் புரிந்து கொள்வர். 18 ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்து அழகு பார்த்த திமுகவுக்கு துரோகம் செய்தவர்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்தபோது, அதற்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் வைகோ. இதற்காகவே மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் அவர். இதற்கு காரணம், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, மு.க.ஸ்டாலின் முதல்வராகி விடக் கூடாது என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டவர் வைகோ.
காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று மூச்சுக்கு முந்நூறு முறை குற்றம்சாட்டும் வைகோ, காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம்.
காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரûஸயே விமர்சிக்கும் அரசியல் நாகரிகமற்ற வைகோவைக் கண்டிக்கிறோம்.
*
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அதே வைகோ தற்போது திமுகவின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரானதும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வருகிறார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில், பாஜக அரசு ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, சட்டப் பிரிவு 370-ஐ அகற்றியது தொடர்பான விவாதத்தில், "காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்தான் முதல் குற்றவாளி. காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை' என்று வைகோ கடுமையாகச் சாடிப் பேசினார். இது காங்கிரஸாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.