
"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.43.32 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.
தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில் மதுரையில் நடைபெற்ற சிறு, குறுந்தொழில்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு உகந்த சூழலை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒற்றைச் சாளர முறையில் தொழில் அனுமதி வழங்கும் திட்டத்தில் சிறு தொழில் கூடங்கள் தொடங்க 667 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 607 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,366 கோடி புதிய முதலீடு ஈர்க்கப்பட்டு, 26 ஆயிரத்து 840 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் "நீட்ஸ்' திட்டத்தில் இதுவரை 2,967 பேர் தொழில் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் திட்டங்களுக்கு அரசு மானியமாக ரூ.305 கோடி வழங்கப்பட்டுள்ளது. "நீட்ஸ்' திட்டத்துக்கு வழங்கப்படும் மானிய உச்சவரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மேலும் பல புதிய தொழில்கள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் 12 ஆயிரத்து 360 சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. இதில் இதுவரை 2 ஆயிரத்து 377 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் "கஜா' புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. "தானே' புயல் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.14.25 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. அதேபோல, "கஜா' புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில்களுக்கு ரூ.43.32 கோடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.