மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று மாலைக்குள் 1 லட்சம் கன அடியாக உயரும்!

மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று மாலைக்குள் 1 லட்சம் கன அடியாக உயரும்!

கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,500 கன அடியாக இருக்கும் நிலையில், பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.


சேலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,500 கன அடியாக இருக்கும் நிலையில், பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

காவிரியில் இதுவரை வரலாறு காணாத வகையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாதுகாப்புக் காரணத்துக்காக காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியில் இதுவரை வந்து கொண்டிருந்த நீரின் அளவானது வினாடிக்கு 35,000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 45,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இது இன்று மாலைக்குள் 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை வரை காவிரியில் பிலிகுண்டுலுவுக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவானது 6,000 கன அடியாக இருந்து, மதியம் 18 ஆயிரம் கன அடியாக மாறி, மாலையில் 30,000 ஆயிரமாகவும், இரவில் 35 ஆயிரம் கன அடியாகவும் மளமளவென உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்திருக்கிறது.  இது இன்று மாலைக்குள் 1 லட்சமாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 57.16 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு சனிக்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நுழைவு வாயில் பூட்டப்பட்டு, பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Video courtesy RK Gowda
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com