காங்கிரஸோடு சேர்ந்து திமுகவும் மூழ்கப் போகிறது: சிவராஜ் சிங் செளகான்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல், திமுகவும் அதோடு சேர்ந்து மூழ்கப் போகிறது என்று பாஜக தேசிய துணைத் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார். 
காங்கிரஸோடு சேர்ந்து திமுகவும் மூழ்கப் போகிறது: சிவராஜ் சிங் செளகான்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல், திமுகவும் அதோடு சேர்ந்து மூழ்கப் போகிறது என்று பாஜக தேசிய துணைத் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார். 
 மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புறநகர் மாவட்டத் தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் மூவேந்திரன், திருப்பரங்குன்றம் தொகுதித் தலைவர் பால.சுந்தர், மண்டல் தலைவர் கே.பி. வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் பங்கேற்று சிவராஜ் சிங் செளகான் பேசியது: 
பாரத பிரதமர் மோடியில் செல்வாக்கு உலகெங்கும் அதிகரித்துள்ளது. இது இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் கிடைக்கும் மரியாதை. பயங்கரவாத செயல்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படுகிறது. 
முத்தலாக் முறையை ஒழிப்போம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்தோம். அதனை உடனடியாக 
நிறைவேற்றினோம். 
காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கியவுடன் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடச் சொன்னார். அதன்படி அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து வருகிறார். அவர்களோடு சேர்ந்து திமுகவும் மூழ்கப் போகிறது.  ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  பாஜக ஏழை, எளியவர்கள், பிற்படுத்தப்பட்டோர், உழைக்கும் மக்களுக்கான கட்சி என்றார்.   
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியது: 
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நம்மைப் போல அம்மாநில மக்களுக்கு முழு சுதந்திரமும், உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த உரிமையை பெற்றுத் தந்தது பாஜக என்றார்.   
தமிழிசை செளந்தரராஜன்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் என கூறி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரலாற்றுப் பிழை செய்து விட்டார். மக்களவையில் தாய்மொழியில் பதவிப் பிரமாணம் செய்ததை பெருமையாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அங்குள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது தாய்மொழியில்தான் பேசினார்கள். வேலுரில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் அவர்களுக்கு இனி எதிர்காலம் இல்லை. இனி வரும் காலத்தில்  பாஜகவிற்கு  மட்டுமே எதிர்காலம் என்றார்.    
பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ்: திமுகவினர் பல தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வெற்றி நிலையானது அல்ல. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்ததன் மூலம் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலில் தோல்வி அடைந்துள்ளார். பாஜகவை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்யவில்லை என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சியின் மீதும்,  மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் பிரதமர் .இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி தந்து அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி தந்தவர் பிரதமர் என்றார்.
கூட்டத்தில் பாஜக மாநில செயலர் பேராசிரியர் சீனிவாசன், மாவட்ட பொதுசெயலர் சிவலிங்கம், தங்கபாண்டியன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com