சுடச்சுட

  

  பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

  By - மு.வேல்சங்கர்  |   Published on : 12th August 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  central

   

  சென்னை: பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த தெற்கு ரயில்வேயில் 62 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்தில்  சென்ட்ரல், எழும்பூர் உள்பட 19 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படவுள்ளன. ஒன்றரை ஆண்டுக்குள் முழு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  733 ரயில் நிலையங்கள்: இந்திய ரயில்வேயில் முக்கிய மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே விளங்குகிறது. இந்த ரயில்வே மண்டலம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வேயில் தினசரி 1,313 ரயில்கள் ஓடுகின்றன. இந்த ரயில்களில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.  

  மேலும், 733 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், முக்கிய ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  62 ரயில் நிலையங்கள் தேர்வு: தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 19 ரயில் நிலையங்கள், மதுரை ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம்

  ரயில்வே கோட்டத்தில் 6 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் என்று மொத்தம் 62 ரயில் நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 

  இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு ஆகிய வசதிகள் செய்யப்படவுள்ளன. 

  நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், நிகழாண்டில்  இந்தியா முழுவதும் 720 ரயில் நிலையங்கள் பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

  இதில் தெற்கு ரயில்வேயில் முக்கியமான 62 ரயில்நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். 

  ஏற்கெனவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில்  பசுமை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பணிகள் முடிந்துவிட்டன. ஆய்வுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அடிப்படையில், சில நடைமுறைகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்ட ரயில்நிலையங்களில் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சுழல் சான்றிதல் பெறுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பயணிகள் தங்கள் கருத்துகளை w‌w‌w.c‌o‌m‌s.‌i‌n‌d‌ia‌n‌ra‌i‌l‌wa‌y.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்றனர்அவர்கள்.

  19 சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் 

  சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல்,  எழும்பூர், கடற்கரை, வேளச்சேரி, மாம்பலம், பழவந்தாங்கல், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, பெரம்பூர் ஆகிய நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு, குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிப்பு போன்றவை செங்கல்பட்டில்  முதன்முறையாக மேற்கொள்ளப்படவுள்ளன. 

  குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்

  ரயில் நிலைய வளாகத்தில் அல்லது ரயில்  தண்டவாளம் அருகே தடுப்பு சுவரைத் தாண்டி ரயில்வே எல்லையில்  குப்பைகளை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai