Enable Javscript for better performance
மாயமான‌ "திருமணிமுத்தாறு'  மீ‌ட்டேடு‌க்க‌ப்படுமா?- Dinamani

சுடச்சுட

  

  மாயமான‌ ‘திருமணிமுத்தாறு’  மீ‌ட்டெடு‌க்க‌ப்படுமா?

  By - ஆர்.ஆதித்தன்  |   Published on : 12th August 2019 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thirumanimuthuaaru


  சேலம்:   தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரு காலத்தில் காவிரி ஆற்றின் துணை நதியாக விளங்கி வந்த திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

  பருவமழை சரிவரப் பெய்யாதது, வேளாண் பொருள்கள் உற்பத்திப் பாதிப்பு போன்ற நிலைமையை மாற்றிட  நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. அந்தவகையில்,  தமிழகம்,  ஆந்திரம்,

  கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேவேளையில்,  மத்திய அரசின் ஜல் சக்தி துறை, நாடு முழுவதும் நீர் பற்றாக்குறை உள்ள இடங்களைக் கண்டறிந்து மழை நீர் சேகரிப்பை ஊக்குவித்து வருகிறது.

  இந்நிலையில், சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி, மஞ்சவாடி கணவாய் வழியாக சேலத்துக்கு வடக்கேயும், வடகிழக்கிலும் பாய்கிறது திருமணிமுத்தாறு. இது காவிரி ஆற்றின் துணை நதியாகும்.  இது ஒரு வற்றாத ஜீவநதியாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாய்ந்தோடி, வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தொழிற்சாலைத் தேவைகளுக்கும் 1960 வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலம் திருமணிமுத்தாறுக்கும் உண்டு.சுமார் 120 கிலோமீட்டர் தூரம் பயணித்து,  நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூரில் நஞ்செய்இடையாறு என்ற இடத்தில் திருமணிமுத்தாறு காவிரியுடன் கலக்கிறது.  மேலும் பல ஏரிகளும்,  குளங்களும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளன.பொன்னி ஆறு,  கன்னிமார் ஓடை,  வறட்டாறு, ஏளுர் ஆறு, ராஜவாய்க்கால் ஆகியவை திருமணிமுத்தாற்றின் கிளை ஆறுகளாகும்.

  1972-இல் இந்திய சர்வே துறை எடுத்த நில அமைப்பு வரைபடத் தரவுகளிலிருந்து சிற்றோடைகள் பலவும் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால்,  வேகமான நகரமயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம், ஆக்கிரமிப்பு, ரியல் எஸ்டேட் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிற்றோடைகள் வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விட்டன.     இத்துடன் பல்வேறு குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிந்து சுற்று வட்டார கிராமங்கள் அனைத்தும் செழிப்பாக இருந்துள்ளன. திருமணிமுத்தாற்றின் படுகையில் கோயில்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.   ஆனால், அதன் அருகில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளாமல் வறண்டு கிடக்கின்றன.  இதனால் அங்குள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வெகு ஆழத்திற்குச் சென்றுவிட்டது.  விவசாயம் பொய்த்து,  விளைநிலங்கள் பாலைவனமாக மாறியுள்ளன.

  மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் காவிரி ஆற்று நீர் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதுவும் போதிய பருவமழை இல்லாதது போன்ற சூழ்நிலைகளில், குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  திருமணிமுத்தாறு தற்போது மாசுபட்டும்,  குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆற்றின் வழிப் பாதைகள் விவசாய நிலங்களாகவும், மாநகராட்சி  கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஆற்றிலிருந்து ஓடிவரும் ஓடைகளில் விடப்பட்டு, வெளியேற்றும் தலமாக மாறிவிட்டது. காவிரி - கோதாவரி நதிநீர் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம் என நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு  மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தந்து வருகின்றன. அந்தவகையில் திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சேலத்தில் வலுத்துள்ளது.

  திருமணிமுத்தாறு மேல் வடிநிலம் குறித்து முனைவர் பட்டம் பெற்றவரும், சேலம் அரசுக் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சி.மணிமொழி கூறியது:

  திருமணிமுத்தாறு சேர்வராயன் மலைக்கு வடக்கிலும் கொல்லிமலைக்குக் கிழக்கிலும், காவிரி ஆற்றை தெற்கிலும், கஞ்சமலையை மேற்கிலும் கொண்டு பாய்கிறது. திருமணிமுத்தாற்றின் வடிநிலத்திலுள்ள ஏரிகளைக் கணக்கில் எடுத்து குடிமராமத்துப் பணிகள் செய்தால் மட்டுமே சேலம் மாவட்டம் குடிநீர் தேவையிலும், விவசாயத்திலும்  ஓரளவுக்குத் தன்னிறைவு அடையும்.

  இதற்கான நீர் மேலாண்மைத் திட்டங்களை உடனே அரசு அமல்படுத்த வேண்டும்.  தரிசு நிலங்கள், உவரி நிலங்கள், மணற்பாங்கான நிலங்களில் குட்டைகள் அமைத்து மழைநீரைச் சேகரித்து நீர் ஆதாரத்தைப் பெருக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

  ஆக்கிரமித்துள்ள நீர்நிலைகளைத் தவிர்த்து,  மற்ற நீர்நிலைகளைப் பராமரித்தாலே இனிவரும் காலங்களில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இல்லையெனில்,  சென்னையைப் போன்று இங்கும் நீர் பற்றாக்குறை தாண்டவமாடும் சூழல் ஏற்படும்.  எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் நிலைகளைக் கணக்கிட்டு (ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு) அவற்றைத் தூர்வாரி, அகலப்படுத்தி மழைநீரைச் சேகரிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

  ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குழுவை நியமித்து நீர் நிலைகளை முறையாகப் பராமரிக்க ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பொதுப்பணித் துறை, நீர் மற்றும் வடிகால் வாரியத் துறையானது "தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுக் கல்வியை' கட்டாயமாக்க  கல்வித் துறைக்குப் பரிந்துரைக்க வேண்டும். கோடைக் காலம், குளிர் காலம் மற்றும் மழைக் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்பதை ஒவ்வொரு கிராமமும் அறியும் வகையில் செய்ய வேண்டும்.
  அதற்காக ஒரு செயலியை இணையத்தில் ஏற்படுத்தி,  செல்லிடப்பேசி மூலமாக அதை எல்லா மக்களும் அறியும்படி செய்து,  தண்ணீரைப் பாதுகாத்து சேமிக்க  வலியுறுத்த வேண்டும்.  விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் புதிய நீர் பாசன முறைகளைக் கொண்டுவர வேண்டும்.

  2005-இல் எடுத்த பொதுப்பணித் துறை தரவுகளில் இருந்து சேலத்தின் வட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிதமான ஆழத்தில் உள்ளது.   அப் பகுதி அதிகமான மழையைப் பெறும் பகுதியாகவும் அடர்வு மிக்க காடுகளைக் கொண்டதாகவும் உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

  ஆனால்,   தென் கிழக்கு மற்றும் தென்மத்தியப் பகுதிகளான ராசிபுரம், சங்ககிரி, கருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகு பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இப் பகுதிகளில் நீர் மேலாண்மை செய்வது உடனடித் தேவையாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்க  அரசு ஆணையிட வேண்டும். குடியிருப்புகளில் கிணறுகள் இருந்தால்,  அதிலும் மழைநீரைச் சேமிக்கலாம். கசிவு நீர் குட்டைகளையும்,  தடுப்பணைகள் மற்றும்  மழைக் காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க வயல்மேடுகள் அமைக்கவும் வழிவகை செய்யலாம். சேலம் மாவட்டத்தில் பிரதான ஏரிகளான கன்னங்குறிச்சி,  பொன்னி ஆறு,  வறட்டாறு, வலசையூர், அயோத்தியாபட்டணம்,  பனமரத்துப்பட்டி,  வெண்ணந்தூர், வீரபாண்டி, மல்லசமுத்திரம் என பிரித்து நீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.

  இந்த ஆறு பாய்ந்தோடும் வழிப்பாதையைக் கண்டறிந்து, அதைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி குடிமராமத்துப் பணிகள் செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இதற்கு அந்த ஆறு பாயும் வழிப் பாதையில் நில ஆக்கிரமிப்பு இருந்தால்,  அதை உடனே அகற்றி நீர் ஆதாரத்தை மேன்மைப்படுத்திட வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் இருக்கும் பட்சத்தில் ஜப்பானைப் போல் நிலத்துக்கு அடியில் நீர்த்தேக்கங்களை உருவாக்கி, மழைநீரை சேமித்து வைக்கலாம். குறிப்பாக, சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஓடும் பாதை நெடுங்காலமாகவே கழிவுநீர் கலக்கும் கால்வாயாகக் காட்சியளிக்கிறது. இதனால், அப் பகுதிகளில் மாசு ஏற்பட்டு, சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கப்படுகிறது.   எனவே கால்வாய் ஓடும் கரைப் பகுதிகளில் அழகு மூங்கில் மரங்கள், அழகு பனைமர வகைகள் ராயல் பாம்ஸ் முதலியவற்றை வளர்த்தால்,  அம் மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனால் அப் பகுதி ஓரளவுக்கு தூய்மையடையும் என்றார்.

  இதுதொடர்பாக,  பாஜக சேலம் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.பி.கோபிநாத் கூறுகையில்,  "பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதல் தடவை ஆட்சி அமைத்தபோது தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்தார்.  தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரதமரின் முதன்மைத் திட்டமாக உள்ள ஜல் சக்தி திட்டத்தை கிராம, நகர அளவில் மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மேட்டூர் உபரி நீரை ரூ.565 கோடி மதிப்பில் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி,  சங்ககிரி,  ஓமலூர், மேட்டூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 100 ஏரிகளில் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில்,  சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரமாக விளங்கி வந்த திருமணிமுத்தாறு தற்போது சூழல் சீர்கேட்டால் மாசடைந்து, கழிவுநீர்க் கால்வாயாக மாறிவிட்டது.  எனவே,  நீர் மேலாண்மைத் திட்டத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுத்து, செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai