காவிரி கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை: டிடிவி தினகரன் வேண்டுகோள் 

காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
காவிரி கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை: டிடிவி தினகரன் வேண்டுகோள் 

சென்னை: காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன் வருகிற தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளைப் பழனிசாமி அரசு செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்கே வெள்ளப்பாதிப்பைத் தடுக்க காவிரி ஆற்றில் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. நாளை முதல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு மேற்கொள்ளப்படவில்லை என செய்திகள் வருகின்றன. எனவே பழனிசாமி அரசு உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் காவிரியில் வரும் தண்ணீரைக் கால்வாய்கள் வழியாக முறையாக திறந்து கடை மடை வரை கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்ககைகளையும் மேற்கொள்ள வேண்டும். பழனிச்சாமி அரசின் அலட்சியத்தால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காவிரியில் வரும் தண்ணீர் கடலில் கலந்து விரயம் ஆகிவிடக்கூடாது. ஏனெனில், கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது உடைந்த திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் கட்டுமான பணி இப்போது வரை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளம் வருகிறது என்றவுடன் கடந்த ஓரிரு நாட்களாக மிகவும் தீவிரமாக பணிகள் நடப்பதாக காட்டிக்கொள்ளும் வேலைகளை மட்டுமே  அங்கே செய்கிறார்கள்.

ஆட்சியாளர்களின் இத்தகைய நிர்வாகத் திறமையின்மையால் கொள்ளிடம் நீரின் மூலம் பாசனம் பெறும் டெல்டாவின் கடைமடையிலுள்ள சில பகுதிகளுக்கும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உட்பட கடலூர் மாவட்டப் பகுதிகளுக்கும் முழுமையாக காவிரி தண்ணீர் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் தடுப்பணை பணிகளையும் விரைந்து செயல்படுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் முதலமைச்சர் பழனிசாமியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறையில் பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1,729/- கோடி நிதியைப் பயன்படுத்தவில்லை என்று மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே அலட்சியத்தோடு தற்போது வருகிற தண்ணீரையும் வீணடித்துவிடாமல் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையிலான ஏற்பாடுகளை இப்போதாவது செய்திட வேண்டும் என்று பழனிசாமி அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com