கடலூர் ஏரிகளைத் தூர்வாரினால் சென்னைக்கு குடிநீர்!

கடலூர் மாவட்டத்திலுள்ள 3 ஏரிகளைத் தூர்வாரினால் பாசனப் பரப்பளவை அதிகரிப்பதுடன் சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி  அருகே உள்ள பெருமாள் ஏரியின் ஒரு பகுதி.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி  அருகே உள்ள பெருமாள் ஏரியின் ஒரு பகுதி.

கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள 3 ஏரிகளைத் தூர்வாரினால் பாசனப் பரப்பளவை அதிகரிப்பதுடன் சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இயற்கைப் பேரிடருக்கு அடிக்கடி உள்ளாகும் கடலூர் மாவட்டம், தண்ணீர் வளம் நிரம்பப் பெற்றதாகும். ஆனால், முறையான பராமரிப்பும், போதுமான திட்டமிடலும் இல்லாததால் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதும், மழைக் காலத்தில் வெள்ள நீர் விரைந்து வடியாமல் தேங்கியிருந்து பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தொடர்கிறது. முறையான திட்டமிடலுடன் மாவட்டத்திலுள்ள வீராணம், வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளை தூர்வாரினால் கூடுதலாக தண்ணீர் சேமிக்கப்படுவதுடன், சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும் அதிகளவு தண்ணீரை அனுப்பி வைக்க முடியும். ஏனெனில், சென்னைக்கு தற்போது கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம், வாலாஜா ஏரிகளிலிருந்தே தினமும் வினாடிக்கு 78 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, இந்த ஏரிகளை தூர்வாரும் போது கூடுதலாக சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும்.

மேட்டூர் முதல் வீராணம் வரை: கடலூர் மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய ஏரியாக  வீரநாராயணபுரம் ஏரி என்ற வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியானது 1.465 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி மூலமாக சுமார் 49 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் 188 கி.மீ. தொலைவு கடந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லணையை அடைகிறது. அங்கிருந்து காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டு 81 கி.மீ. தொலைவு கடந்து கீழணையை அடைகிறது. அங்கிருந்து வடவாற்றில் தண்ணீர் திருப்பிவிடப்பட்டு 22 கி.மீ. தொலைவு கடந்து வீராணம் ஏரியை அடைகிறது.

வீராணம் ஏரி நிரம்பியவுடன் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வாலாஜா ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாலாஜா ஏரி நிரம்பிய பின்னர் நடுபரவனாறு வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. 16 கி.மீ. நீளமும், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த ஏரி நிரம்பிய பின்னர் தண்ணீர் கீழ் பரவனாறு வழியாகச் சென்று கடலூர் முதுநகர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையின்போது கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 10 நாள்களில் 2 லட்சம் டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை முறைப்படுத்தியிருந்தால் இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கும்.

வீராணம் ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் பாசனத் தேவைக்கும், சென்னை நகர மக்களின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வாலாஜா ஏரிக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரே தற்போது சென்னையின் குடிநீருக்காக குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த 3 ஏரிகளையும் தூர்வாருவதன் மூலம் கூடுதல் பலன்களைப் பெற முடியும் என்கிறார் பெருமாள் ஏரி நீர்பாசன விவசாயிகள் சங்கச் செயலர் தாணூர் ஆர்.சண்முகம். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய நிலையில் வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரிகளை அதன் பழைய முழுமையான நீர்கொள்ளளவின்படி தூர்வாரினால் 5 முதல் 6 டிஎம்சி தண்ணீரைத் தேக்க முடியும். இதனால், சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருபோக விளைச்சலைப் பெற முடியும். 

இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் செழித்து வளரும். தற்போது வீராணம், வாலாஜா ஏரிகளிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீரின் அளவை 150 கன அடியாக உயர்த்திக் கொள்ள முடியும். ஏனெனில், இந்த 3 ஏரிகளும் நிரம்பினால், நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் 150 கன அடி நீரை அப்படியே சென்னைக்கு கொண்டு செல்லலாம். தேவைப்பட்டால் வீராணம் ஏரி, வாலாஜா ஏரியிலிருந்தும் கூடுதல் தண்ணீரை எடுத்துச் செல்ல முடியும்.

இதற்காக, ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை செலவிட்டால் போதுமானது. அதிலும், பாதி பணத்தை உடனடியாக அரசு திரும்ப எடுத்து விட முடியும். அதாவது, இந்த 3 ஏரிகளையும் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தியதுபோக மீதமுள்ள மண்ணை விற்பனை செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை திரும்ப கிடைத்துவிடும். எனவே, அரசு இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தலாம். தற்போது, வாலாஜா ஏரியின் ஒரு பகுதியை என்எல்சி நிறுவனம் ரூ.13.50 கோடியில் சீரமைத்து வருகிறது. ஏற்கெனவே வீராணம் ஏரி சீரமைப்புக்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்ட பெருமாள் ஏரியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 3 ஏரிகளும் முழுமையாக தூர்வாரப்படும்போது இந்தப் பகுதியில் விவசாயமும், அதுசார்ந்த பொருளாதாரமும் சிறக்கும். சென்னையின் குடிநீர்த் தேவையை எளிதாக நிறைவு செய்ய முடியும். 

இதுகுறித்து, முதன்மைச் செயலர்கள் அளவில் மனு அளித்துள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தற்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், இந்தத் திட்டம் அவரது கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டால் உடனடியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com