வேளாண் உற்பத்தியைப் பெருக்க மண் வகையீட்டுப் பிரிவை தொடங்க வேண்டும்: ராமதாஸ் 

வேளாண் உற்பத்தியைப் பெருக்க மண் வகையீட்டுப் பிரிவைத் தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் உற்பத்தியைப் பெருக்க மண் வகையீட்டுப் பிரிவை தொடங்க வேண்டும்: ராமதாஸ் 

வேளாண் உற்பத்தியைப் பெருக்க மண் வகையீட்டுப் பிரிவைத் தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உழவர்களின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு பெரும் உதவியாக இருக்கும் திட்டத்திற்கு பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போடப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
 நிலம் வளமாக இருந்தால் தான் பயிர் செழிப்பாக வளரும். இந்தத் தத்துவத்தின்படி, தமிழகத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க, அனைத்து வருவாய் கிராமங்களிலும் விரிவான மண் வகையீடு செய்து, வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மற்றும் வேளாண்மைக்குப் பயன்படாத நிலம் என பிரிக்கப்பட  வேண்டும். 
இதற்கான முதல் பணியாக, வேளாண் துறையின் ஆராய்ச்சிப் பிரிவிலும், பின்னர் விரிவாக்கப் பிரிவிலும் இயங்கி வரும் மண்வகையீடு மற்றும் நிலப் பயன்பாட்டு நிறுவனத்தை  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இணைக்க வேண்டும்.  
வேளாண் விரிவாக்கத்துறையுடன் மண்வகையீட்டுப் பிரிவு இணைக்கப்பட்டது முதல் இன்று வரையிலான 11 ஆண்டுகளில் மண்வகையீட்டுப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைப் போலவே,  தமிழகத்தில் வேளாண்மை உற்பத்தித் திறனும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் தமிழகத்திலுள்ள உழவர்களுக்கு அவர்களுக்கு சொந்தமான மண்ணின் தன்மை, அவற்றில் இடப்பட வேண்டிய உரங்கள் மற்றும் அவற்றின் அளவு குறித்து அறிவியல் முறையில் ஆலோசனை வழங்கப்படாதது தான். 
இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் 22.30 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் முறையான மண்வள ஆலோசனை இல்லாமல் சீரழிந்து வருகின்றன. இவை உள்பட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விளைநிலங்களுக்கும் மண் வள ஆய்வு செய்து, அவற்றின் தன்மை என்ன? அந்த நிலங்களில் எத்தகைய பயிர்களை பயிரிடலாம்? என்னென்ன உரங்களை, எவ்வளவு இடலாம்? என்பன உள்ளிட்ட விவரங்களை அனைத்து உழவர்களுக்கும் செல்லிடப்பேசி செயலி மூலம் வழங்குவற்காக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 
ஆனால், அந்தப் பணிக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள சில சக்திகள் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
இத்தகைய சதிகளை முறியடிப்பதுடன், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com