இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி 

இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா? என்று ப.சிதம்பரத்தை விமர்சித்த : முதல்வர் பழனிசாமிக்கு காங்கிரஸ் மாநிலத்து தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி 

சென்னை: இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா? என்று ப.சிதம்பரத்தை விமர்சித்த : முதல்வர் பழனிசாமிக்கு காங்கிரஸ் மாநிலத்து தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலைப் பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன் ? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன ?” என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாக பேசியிருக்கிறார்.

1984 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்த திரு. ப. சிதம்பரம் அவர்கள் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சராகவும், பிறகு,1991 இல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். புதிய பொருளதாரக் கொள்கை அமலுக்கு வந்த போது, அதை நிறைவேற்றுகிற வகையில் வர்த்தகத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார்.

1996 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது, கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்.   இவரோடு இணைந்து பணியாற்றியவர்களில் அவரது செயல் திறனை பாராட்டாதவர்களே இல்லை. புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயங்காதவர். கூர்மையான சிந்தனை கொண்ட சீர்திருத்த மேதை என்று அவரை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கை என்பது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை தகர்த்த அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் தொடர்ந்து, அதே பாதையில் தமது தனி முத்திரையை பதித்தவர். 2004 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அக்கால கட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முதற்கட்டமாக 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்தார். பிறகு, படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றியமைத்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தினார்.

2008 ஆம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்குவதற்காக ரூ.65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். அதனால் பயனடைந்தவர்களின் பட்டியலை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடச் செய்தவரும் இவரே. இவர் நிதியமைச்சராக இருந்த போது தான் சமூக சேவை திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பல மடங்காக அதிகரித்தது.

முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, திரு. ப. சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று நா கூசாமல் கேட்கிறீர்களே, நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா ? இன்னும் வேண்டுமா ? நிதியமைச்சராக இருந்து சாதித்த சாதனைகளை மறைக்கும் வகையில் பேசுவதன் மூலம் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ?

சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, 2004 முதல் 2009 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தியதில் திரு. ப. சிதம்பரம் அவர்களின் பங்கை பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியவரை இந்தியாவின் சாதனைச் செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப. சிதம்பரம் அவர்களை, விபத்தின் மூலம் முதலமைச்சராக பதவிக்;கு வந்த எடப்பாடி அவர்களே, உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.

திரு. ப. சிதம்பரம் அவர்கள் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com