கொள்ளையர்களை தீரத்துடன் எதிர்கொண்ட வீரத்தம்பதி: நெல்லை எஸ்.பி. பாராட்டு (விடியோ)

வீட்டுக்குள் அரிவாளுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்களை தீரத்துடன் எதிர்கொண்ட வீரத் தம்பதியை நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
கொள்ளையர்களை தீரத்துடன் எதிர்கொண்ட வீரத்தம்பதி: நெல்லை எஸ்.பி. பாராட்டு (விடியோ)


வீட்டுக்குள் அரிவாளுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்களை தீரத்துடன் எதிர்கொண்ட வீரத் தம்பதியை நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

சண்முகவேல் - செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு இன்று சென்ற எஸ்.பி. அருண் சக்திகுமார், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியிருந்ததற்கும், தீரத்தோடு கொள்ளையர்களுடன் போராடி அவர்களை ஓட ஓட விரட்டியதற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இதன் மூலம், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவதின் அவசியத்தையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை, கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் செருப்பு, பக்கெட் என கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசி ஓட ஓட விரட்டிய முதிய தம்பதியினரைப் பற்றிய விடியோ நேற்று வைரலானது.

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர்  மிகப்பெரிய ஹீரோவாக மாறியுள்ளார்.

சண்முகவேல் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, வீட்டை நோட்டம் விட்டு வந்த மூகமூடிக் கொள்ளையர்கள் ஆளில்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்த சண்முகவேலின் கழுத்தில் துணியைக் கட்டி அவரைத் தாக்க முயன்ற முகமூடிக் கொள்ளையனிடம் இருந்து அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு மீண்டும் தாக்க முயன்றார். அப்போது சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த சண்முகவேலின் மனைவி செந்தாமரையும், தனது கணவரின் போராட்டத்தில் உடன் சேர்ந்து கொண்டார்.

கையில் அரிவாளுடன் ஆஜானுபாகுவாக நின்றிருந்த கொள்ளையர்களைப் பார்த்து இருவரும் ஒரு நிமிடம் கூட அச்சம் கொள்ளவில்லை. பக்கெட், சேர் என இதுதான் என்று இல்லாமல் கையில் கிடைத்தப் பொருட்களை எல்லாம் அஸ்திரங்களாக்கி, கடுமையான போரைத் தொடுத்தனர்.

முதியவர்கள்தானே, லேசாக ஒரு தட்டுதட்டி பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிடலாம் என்று ஹாயாக வந்த கொள்ளையர்களோ இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

முதியவர்களை எதிர்த்து போராடியும், சேர், பக்கெட் போன்ற அஸ்திரங்களின் தாக்குதலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாமலும் புறமுதுகிட்டு ஓடினார்கள் கொள்ளையர்கள். அப்படியும் அவர்களை விடாமல் ஓட ஓட துரத்தி அடித்தார் சண்முகவேல். அவரது போராட்டத்தில் ஒரு பிளாஸ்டிக் சேர் சுக்கு நூறானது தான் மிகப்பெரிய சேதம்.

சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உள்ளூர் ஆட்களாக இருப்பார்கள் என்று சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

இவை அனைத்தும் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது இன்று செய்தி தொலைக்காட்சிகள் வாயிலாக வைரலாகியுள்ளது.

முதிய தம்பதி தீரத்துடன் போராடி முகமூடிக் கொள்ளையர்களை விரட்டியதைப் பார்த்த அனைவரும் அவர்களை மனதாரப் பாராட்டினர், பாராட்டி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com