போக்குவரத்து ஊழியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்: மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குறைகளை சரி செய்யும் வகையில், வாரம் ஒரு நாள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு, துறையின் முதன்மைச்


போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குறைகளை சரி செய்யும் வகையில், வாரம் ஒரு நாள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு, துறையின் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். 
அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆக. 7,8,9 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 
இதில் முதல்வர் 110 விதியின் கீழ் பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், செலவுகளைக் குறைத்து நிதி நிலையை மேம்படுத்துதல், பணியாளர்களின் பதவி உயர்வு, பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு  விரைந்து நடவடிக்கை எடுத்தல், பணிமனைகளின் பழுதுகளை நிவர்த்தி செய்தல், மானிய கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்துதல், புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் வசூல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. 
தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பேசியது: தற்போது இயக்கப்படும் 3,881 புதிய பேருந்துகளை நல்ல முறையில் பராமரித்து வருவாயை பெருக்கிட வேண்டும். பணிமனைகள் குறித்துஆய்வு செய்யப்பட்டு விரைவாக அவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  
மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலிகளுடனே ஏறும் வசதி கொண்ட பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் இயக்கப்படும்.
 நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விரைவில் இயக்கவுள்ள மின்சார பேருந்துகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அந்தப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 
மேலும், பொது மக்களின் சேவைகளில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் களைந்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் ஆவன செய்ய வேண்டும். 
அந்த வகையில் வாரம் ஒரு குறிப்பிட்ட நாளில் பணியாளர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். 
அப்போதுதான் பணியாளர்கள் முழு அற்பணிப்புடன் தரமான சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். 
கூட்டத்தில், தமிழகத்தின் எட்டுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com