காவல் ஆய்வாளரை ஆட்சியர் மிரட்டிய விவகாரம் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஆய்வாளரை மிரட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க, தலைமைச் செயலர் உள்பட மூவருக்கு


அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஆய்வாளரை மிரட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க, தலைமைச் செயலர் உள்பட மூவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்வதாக காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா மிரட்டுவது போன்ற காணொலி காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. 
இதில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர், விஐபி வரிசையில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறி காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, அவரை ஒருமையில் திட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும், தான் முழுமையாக பரிசோதித்த பிறகே அனுமதிப்பதாக காவல் ஆய்வாளர் கூறுவது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது. இந்த விவகாரம் குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. 
மனித உரிமை ஆணையம் கேள்வி: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசுவதும், மிரட்டுவது போன்ற காஞ்சிபுரம் ஆட்சியரின் செயல் மனித உரிமை மீறல் இல்லையா? உணவு, குடிநீர், இருப்பிடம் குறித்த கவலையின்றி, இரவு, பகல் பாராமல் நேர்மையான முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களை ஆட்சியரின் சொற்கள் தாக்கும் விதமாக இருக்காதா? ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் ஊடகத்தில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியர் மீது தலைமைச் செயலர் எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார். 
மேலும், இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (சட்ட ஒழுங்கு பிரிவு), காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com