ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு விருதுகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 
 கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விருதுகளை வழங்குவதற்கு முன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:-
இசை, கிராமியக் கலை, நாட்டியம் என பல்வேறு கலைகளின் பிறப்பிடமாகத் தமிழகம் திகழ்கிறது. இயல், இசை, நாடகத் துறைக்கு தன்னையே அர்ப்பணித்து தொண்டாற்றும் கலைஞர்களை ஆதரித்து அவர்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கால தமிழ் மன்னர்கள் பெரும் பொருளுதவி செய்தனர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கலைஞர்களின் நலன் காத்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  
 பொது மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் பல்வேறு நலத் திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து ஊக்கப்படுத்தினர்.
அதன்படி, பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த கலை பண்பாட்டுத் துறை எனும் தனித்துறையானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இந்தத் துறையின் கீழ், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக பல்வேறு திட்டங்கள் கலைஞர்களுக்காகவும், கலைக் குழுக்களுக்காகவும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 200 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர்கள் பலர் சில கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று மூன்று அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
புதிய அறிவிப்புகள்: கலைமாமணி விருது 3 சவரனுக்குப் பதிலாக இனி 5 சவரன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக அளிக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.
நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து  ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
முன்னதாக, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார். சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால், கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com