தற்காலிகத் தங்குமிடங்களில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு : மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டு

அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் தினந்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவதாலும்,
தற்காலிகத் தங்குமிடங்களில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு : மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டு


அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் தினந்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவதாலும், பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கி இம்மாதம் 17-ஆம் தேதி நிறைவடைகிறது.ஜூலை மாதம் முழுவதும் பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து அத்திவரதரைத் தரிசித்து செல்கின்றனர். 
கடந்த 10, 11, 12 ஆகிய தேதிகள்  சனி,ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகையாக இருந்ததால் அதிகமான  எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள்  எனக்கருதிய  மாவட்ட  நிர்வாகம், பக்தர்கள்  தங்குவதற்காக 3 இடங்களில்  3 தங்குமிடங்களை அமைத்தது. 
அதனடிப்படையில் வந்தவாசி, உத்தரமேரூர் வழியாக வரும் பக்தர்கள் தங்குவதற்காக கீழ்க்கதிர்பூர் பி.ஏ.வி. பள்ளி மைதானத்திலும், சென்னை, அரக்கோணம், வேலூர் மற்றும் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக கீழ்க்கதிர்பூர் பெட்ரோல் பங்க் அருகிலும், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வருபவர்கள் தங்குவதற்கு நத்தப்பேட்டை பச்சையப்பா ஆடவர் கல்லூரி என 3 இடங்களில் தற்காலிகத் தங்குமிடங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
இந்த தங்குமிடங்களில் போதுமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பக்தர்கள் இளைப்பாறுவதற்கான வசதி, மருத்துவ முகாம், மிகப்பெரிய அளவில் சமையல்கூடம், பேருந்து வசதி  உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காகச் செய்து கொடுத்துள்ளது. பிரம்மாண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு அதிலிருந்து போதுமான அளவு தண்ணீர் 100-க்கும் மேற்பட்ட கேன்களில் நிரப்பப்பட்டு பக்தர்களுக்கு தினமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அகண்ட திரையில் தங்குமிடத்திலிருக்கும் அனைவரும் பார்த்து ரசிக்கும்படி ஆன்மிகம் மற்றும் சரித்திரத் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
தற்காலிகத் தங்குமிடங்களிலிருந்து சிறப்புப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளன. 
இங்கிருந்து ஒரு மணி நேரத்துக்கு 8 பேருந்து வீதம் பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன. பேருந்துக் கட்டணமாக ரூ. 20 வீதம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள் பேருந்து  நிலையம் சென்ற பிறகு அங்கிருந்து  சிற்றுந்துகள்  மூலம்  கோயில்  அருகேயுள்ள ரங்கசாமி குளம் வரை செல்ல வசதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி பக்தர்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழ்க்கதிர்ப்பூர் பி.ஏ.வி.பள்ளி மைதானத்தில் தங்கியிருந்த கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் கூறியது: அரக்கோணம் வழியாக  நாங்கள்  கோயம்புத்தூர்  செல்ல   வேண்டும்.  அரக்கோணம்  சென்று,  பின்னர்  அங்கிருந்து  கோயம்புத்தூர் செல்வதற்கு போதுமான ரயில்  வசதி  இல்லை. இதனால், காஞ்சிபுரத்தில்  அறை  எடுத்து தங்க  முயன்றபோது   விடுதிகளில்  கட்டணம் அதிகமாக  இருந்தது. இங்கு  தற்காலிகத்  தங்குமிடம் அமைக்கப்பட்டிருப்பதை  அறிந்து  குடும்பத்துடன் வந்து தங்கினோம். செலவில்லாமல் தங்கியதுடன், 3 வேளையும் சுவையான உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. அனைத்து வசதிகளோடு, தங்குமிடம் அமைத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
கீழ்க்கதிர்ப்பூர் பி.ஏ.வி.பள்ளி மைதானத்தில் தற்காலிகத் தங்குமிடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார். 
உணவை வாங்கி ருசிபார்த்த ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 3 தங்குமிடங்களிலும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தங்குமிடத்திலும் 30 ஆயிரம் பேர் வரை அமர்ந்து இளைப்பாறும்  வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கதிர்ப்பூர் பி.ஏ.வி.பள்ளி மைதானத்தில் சாய்ராம் கல்விக்குழுமத்தின் சார்பில் தினசரி 30 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மற்றொரு தங்குமிடமான கீழ்க்கதிர்ப்பூர் பெட்ரோல் பங்க் பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குழுவினராலும், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி தங்குமிடத்தில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி சார்பிலும்,வாழைத்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  தங்குமிடத்தில் எஸ்.ஆர்.எம்.கல்லூரி சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 
தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் 3 தங்குமிடங்களிலும் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com