தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நெக்ஸ்ட் தேர்வு உள்ளிட்ட சில ஷரத்துகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நெக்ஸ்ட் தேர்வு உள்ளிட்ட சில ஷரத்துகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1.5 கிலோ அல்லது அதற்கும் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு நிமோகாக்கல் தடுப்பூசி வழங்கல், ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழா ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதனை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது: எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு நிமோகாக்கல் தடுப்பூசி போடும் திட்டத்தை நாட்டிலேயே தமிழகம்தான் முதன்முதலாக மேற்கொண்டுள்ளது. எடை குறைவாகப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த 1.5 மாதத்தில் இருந்து 15 ஆவது மாதம் வரை 4 முறை இந்த தடுப்பூசி போட வேண்டும். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.4 ஆயிரம். ஒரு குழந்தைக்காக மட்டும் அரசு சார்பில் ரூ.16 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 250 குழந்தைகளுக்கு நிமோகாக்கல் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஆயிரத்துக்கு 24 பச்சிளம் குழந்தைகள் இறக்கும் நிலையில், தமிழகத்தில் 16 குழந்தைகளாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜைகா திட்டத்தில் ரூ.286 கோடி மதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தொடங்கப்பட்டுள்ள ரத்தநாள அறுவை சிகிச்சைப் பிரிவின் மூலம் தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்க முடியும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நெக்ஸ்ட் தேர்வு உள்பட குறிப்பிடப்பட்டுள்ள சில ஷரத்துகள் குறித்து தமிழக அரசின் எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்துள்ளோம். இதில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், நெக்ஸ்ட் தேர்வு உள்பட சில ஷரத்துகளுக்காக எங்களின் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம் என்றார். 
நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், மாநில உடல் உறுப்புகள் தான ஒருங்கிணைப்பாளர் காந்திமதி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் பூ.அசோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர் உள்பட பலர் பங்கேற்றனர். 
செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வருக்கு மெமோ: நிகழ்ச்சியின், தொடக்கத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் சுகாதாரத் துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா பரிசுப் பெட்டகம் உள்ளிட்ட சில திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டபோது, மாணவிகளுக்குப் பதில் தெரியவில்லை. 
தொடர்ந்து செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் கேட்டபோது, அவரும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்த முதல்வர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அவருக்கு 17ஏ மெமோ அளிக்க அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com