நாளை சுதந்திர தின விழா: கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் பழனிசாமி

 சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் கே.பழனிசாமி. 
நாளை சுதந்திர தின விழா: கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் பழனிசாமி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் கே.பழனிசாமி. 
மேலும், துணிவு சாகச செயலுக்கான விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது போன்றவற்றையும் அவர் விருதாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கிறார். சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா சென்னை கோட்டை கொத்தளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பொதுத்துறை மேற்கொண்டு வருகிறது.
காலை 9 மணி...: சுதந்திர தின விழாவுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை 9  மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் கே.பழனிசாமி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார். இந்த உரையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோருக்கு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளையும் அவர் அளிக்கவுள்ளார்.
விருதாளர்கள் தேர்வு: துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கான அப்துல் கலாம் விருது, அரசுத் திட்டங்களை மக்களிடம் சீரிய முறையில் கொண்டு சென்ற அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வரின் நல்ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் போராடும் அமைப்புகளுக்கான விருதுகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விருதாளர்களுடன் முதல்வர்,  குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார். இந்த நிகழ்வுகளை முடித்துக் கொண்டு கோட்டை கொத்தளத்தின் கீழ்புறத்தில் நடைபெறும் நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை முதல்வர் பழனிசாமி தெரிவிப்பார்.
விருதும்-தேநீர் விருந்தும்: கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நிறைவடைந்ததும், வியாழக்கிழமை நண்பகலில் சென்னையில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபால், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளிக்கிறார். இதற்கான அழைப்பிதழும் ஆளுநர் மாளிகையில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com