மழை பாதிப்பு: நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.199 கோடி தேவை

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ. 199.23 கோடி தேவை எனவும்,  இதுதொடர்பாக துறைரீதியான ஆய்வு செய்து, முதல்வரிடம்  விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும்
மழை பாதிப்பு: நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.199 கோடி தேவை


கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ. 199.23 கோடி தேவை எனவும்,  இதுதொடர்பாக துறைரீதியான ஆய்வு செய்து, முதல்வரிடம்  விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்தமழையால் ஏற்பட்ட  மழைச் சேதங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  உதகையில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 3 நாள்களில் பெய்ததே பலத்த சேதம் ஏற்படக் காரணம். நீலகிரி மாவட்டத்தில் மழைச் சேதங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 2,020 குடும்பங்களைச் சேர்ந்த 5,875 பேர்  50 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  
மேலும், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அடுத்த ஒரு வாரத்துக்கு அவர்கள் நிவாரண முகாம்களிலேயே தங்கியிருப்பார்கள். எனவே, நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.  மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 1,380 வீடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இது தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பகுதியளவு வீடு சேதமடைந்தவர்களுக்கு 15 நாள்களுக்குள்  தற்காலிகக் குடியிருப்புகளும், முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு 6 மாதங்களுக்குள் நிரந்தர வீடுகளும் கட்டித் தரப்படும் .

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கரில் பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தற்காலிகமாகவும்,  நிரந்தரமாகவும் ரூ. 4.37 கோடி தேவைப்படுகிறது. மாவட்டத்தில் 46 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் சேதமடைந்துள்ளன. சாலைகளின்  மறு சீரமைப்புக்கு ரூ. 23 கோடி தேவைப்படுகிறது.  3.5 கி.மீ தூரத்திற்கு மின்பாதைகள் சேதமடைந்துள்ளன. அவற்றைச் சீரமைக்க ரூ.12 கோடி தேவை. உதகையிலிருந்து குந்தா, அவலாஞ்சி இடையே  104 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. இவை தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, வெலிங்டன் ராணுவ மைய வீரர்கள், தீயணைப்புத் துறையினர்  உள்ளிட்ட 491 பேர் நீலகிரி மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு 2 நாள்களில் மாவட்டத்தை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்துள்ளது. மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு மொத்தம் ரூ.199.23 கோடி தேவைப்படுகிறது. இது குறித்த விரிவான ஆய்வறிக்கை  தமிழக முதல்வரிடம்  விரைவில் சமர்ப்பிக்கப்படும். பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேசி தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை  மேலும் உயர்த்துவது தொடர்பாகவும்  கேரள அரசிடம் பேசி தீர்வு காணப்படும்.  
இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது அரசுக்கு உரிய  ஆலோசனை வழங்குவதை விடுத்து, குறை சொல்வதிலேயே விளம்பரம் தேடுகிறார் ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவையிலும்  இதுவே நடக்கிறது. பிறகு உரிய ஆதாரங்களுடன் விளக்கினால் அமைதியாகி விடுகிறார். இதுவே அவரது வாடிக்கையாக உள்ளது.
அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், சேலம் முதல் நாகை வரையுள்ள 12 மாவட்டங்களில்  கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், மிகை நீர் வீணாவது தடுக்கப்படும். குடிமராமத்துப் பணிகள் மூலம் ஊருணிகள், வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கும் பணி மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகவே இரண்டாம் முறையாகவும் ஆட்சிக்கு வந்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். 
பேட்டியின்போது, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,  நீலகிரி மாவட்டத்துக்கான  கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com