மேட்டூர் அணையில் இருந்து கரூர் வரை ஏரி, குளங்களை நிரப்ப ரூ.25 ஆயிரம் கோடியில் திட்டம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

மேட்டூர் அணையில் இருந்து கரூர் வரை ஏரி, குளங்களில் உபரிநீரை நிரப்பும் வகையில் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், அமைச்சர்கள்
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், அமைச்சர்கள்


மேட்டூர் அணையில் இருந்து கரூர் வரை ஏரி, குளங்களில் உபரிநீரை நிரப்பும் வகையில் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வலது கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தண்ணீரைத் திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
மேட்டூர் அணை 101 அடியை எட்டியுள்ளது.  அணையில் 66 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.  அணைக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீரைப் பொருத்து, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் திறக்கப்படும்.  அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை திறக்கப்படும்.
இதனால்,  சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.  இதற்காக மொத்தம் 339 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.  மேட்டூர் அணையில் இருந்து 220 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டி.எம்.சி. தண்ணீர் வடகிழக்குப் பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும்.
மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும்.  இதனால், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 
மேலும்,  காவிரி ஆற்றிலிருந்து சுமார் 155 திட்டங்களின் மூலம் தினசரி 1,700 மில்லியன் லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீர் 8 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுகிறது.  மேலும்,  20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.  அதுமட்டுமல்லாமல், நீர் மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும்,  சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமுமாக மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. 
மேலும்,  காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர் மின்நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து 210 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விட்டோம்.   விவசாயிகளுக்குத் தேவையான விதை, நெல், உரம் ஆகியவையெல்லாம் இருப்பு உள்ளன. 
கர்நாடகத்தில் 4 அணைகளுமே நிரம்பி விட்டன.  அங்கு பெய்கிற மழைநீர் முழுவதும் கர்நாடகத்திலிருந்து 4 அணைகளின் வழியாக  மேட்டூர் அணைக்கு வந்து சேரும். பருவ காலங்களில் பெய்கிற மழைநீர் வீணாகாமல் இருக்க ஓடைகள்,  நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.  இதற்காக அரசால் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.600 கோடி செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு, செயலாக்கத்துக்கு வந்துள்ளது.

மேலும் 3 தடுப்பணைகள் கட்ட பரிசீலனை: மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.  2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது.  அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்: கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றியே தீரும்.  இத் திட்டத்தின் மூலம் 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.  கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் கரூரில் இணைக்கப்படும்.  அதற்கு மேல் உள்ள பகுதிகள் அனைத்தும் நீரேற்றுத் திட்டத்தின் மூலமாக இரண்டு பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்குத் தேவையான நீரை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர்,  ஓமலூர், சங்ககிரி, சேலம் ஆகிய 4 தொகுதிகளுக்கு உள்பட்ட 100 ஏரிகளில் ரூ.565 கோடியில் மேட்டூர் உபரிநீரை தேக்கி வைக்க இருக்கிறோம்.  கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற பாசனம் பெறாத அந்த ஏரிகளுக்கும் மேட்டூர் உபரி நீரை கொண்டு சென்று நிரப்பப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்களுக்கும் நீரேற்றுத் திட்டத்தின் மூலமாக தண்ணீர் ஏற்றப்பட்டு, அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். 

உபரிநீரை ஏரி,  குளங்களில் நிரப்ப ரூ.25 ஆயிரம் கோடியில் திட்டம்: விவசாயிகள் பயன்பெறும் விதமாக மேட்டூர் அணையில் இருந்து கரூர் வரையிலுள்ள இரண்டு பகுதியிலும் இருக்கும் ஏரிகள், குளங்கள் முழுவதும் நிரப்புகின்ற விதமாக உபரிநீரை நீரேற்றுத் திட்டத்தின் மூலம் நிரப்பப்படும். இந்த திட்டங்களைச் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 
 இதற்காக 2 ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், 3 ஓய்வுபெற்ற கண்காணிப்புப் பொறியாளர்களை நியமித்து,  பருவமழைக் காலங்களில் எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாகக் கடலில் கலக்கிறதோ, அதையெல்லாம் கணக்கிட்டு, அந்த தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்று அறிக்கை பெறப்படும்.  அதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும். 
தலைவாசலில் ரூ.1,000 கோடியில் கால்நடை பூங்கா: விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, சேலம் மாவட்டம் தலைவாசலில் சுமார் ரூ.1,000 கோடியில், 1,200 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது.  
இதில் கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி நிலையம் கட்டப்படும். கலப்பினப் பசுக்கள், ஆடுகள், கோழிகள், மீன்கள் போன்றவற்றை  உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.  நோய் தாக்குதலைத் தாங்கி, அதிகளவில் பால் கொடுக்கும் கலப்பினப் பசுக்களை உருவாக்க உள்ளோம்.
நீலகிரியில் ரூ.50 கோடியில் விந்தணுக்களைப் பிரிந்து விவசாயிகளுக்குத் தேவையான கன்றுகளை ஈன்று வழங்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.
மேட்டூர் கிழக்குக் கரை, மேற்குக் கரை கால்வாய்கள் முழுவதையும்,  மேட்டூர் அணையிலிருந்து அது முடியும் எல்லை வரை கான்கிரீட் கால்வாய் அமைக்கும் திட்டத்தை ரூ.600 கோடியில் அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. 
கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்படும்:  தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இது போன்று கான்கிரீட் கால்வாய்கள் உருவாக்கப்படும்.  டெல்டா பாசனக் கால்வாய்களையும் சீர் செய்வதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கேட்டுள்ளோம்.  அனுமதி கிடைத்தவுடன் டெல்டா பாசனக் கால்வாய்கள் அனைத்தும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றி அமைக்கப்படும்.  இதன் மூலம், சுமார் 20 சதவீதம் தண்ணீர் வீணாகாமல் மிச்சப்படுவதுடன், ஆண்டுதோறும் தூர்வாரும் நிலையும் மாறும்.
பொள்ளாச்சி பகுதியில் பரீட்சார்த்த முறையில் ரூ.500 கோடியில் சொட்டு நீர்ப் பாசனம் மூலமாக சுமார் 7,500 ஏக்கர் நிலத்தை எடுத்து,  அவற்றுக்குத் தேவையான கருவிகளை அரசே கொடுத்து,  அத் திட்டத்தை உருவாக்க இருக்கிறது. 
ஓர்  ஏக்கருக்குப் பயன்படும் நீர், சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பாய்ச்சும் போது கிட்டத்தட்ட 7 ஏக்கர் நிலத்துக்குப் பயன்படுகிறது. 
இத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில்,  பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் மணிவாசகம் வரவேற்றார்.  அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்,  கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், வி.சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன்,  எம்.எல்.ஏ.க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com