சுடச்சுட

  

  அதிவேக சூறைக்காற்றால்  மீன்பிடி தொழிலில் ரூ.20 கோடி இழப்பு

  By DIN  |   Published on : 15th August 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக சுமார் ரூ.20 கோடி வரை மீன்பிடித் தொழிலில் இழப்பு ஏற்பட்டுள்ளது என மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பி.காத்தவராயன் தெரிவித்தார்.
   ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் நீண்ட கடற்கரையைக் கொண்டதாக உள்ளது. இங்கு 1500 விசைப்படகுகளும், நான்காயிரம் நாட்டுப் படகுகளும் உள்ளன. அதன்மூலம் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
   இந்நிலையில், கடந்த சில நாள்களாக மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் கடலில் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக விசை மற்றும் நாட்டுப் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் மூலம் தினமும் சுமார் ரூ.2 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. சூறைக்காற்று காரணமாக அந்த வருவாயும் கிடைக்கவில்லை.
  இதுகுறித்து, புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பி.காத்தவராயன் கூறியது: மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பலத்த கடல் காற்று வீசுவது வழக்கமாகும். ஆகவே அதிவேகக் காற்று வீசுகையில் மீன்பிடிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் 10 நாள்கள் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாத வகையில் பலத்த காற்று வீசியது. இதனால், மீன்பிடித் தொழிலில் சுமார் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களை எளிதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மீனவக் கிராமங்கள் தோறும் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் இடைத்தரகர் இன்றி ஏற்றுமதி நிறுவனங்களை மீனவர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு வருவாய் ஈட்டலாம் என்றும் மீன்வளர்ச்சித் துறை  வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai