சுடச்சுட

  

  அத்திவரதர் சிலை வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளம்: நீரை ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு

  By DIN  |   Published on : 15th August 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anandasaras


  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு முன் அந்த தண்ணீரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோகன்  என்பவர் தாக்கல் செய்த மனுவில், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அத்திவரதர் சிலை வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும். ஒருவேளை தவறிவிட்டால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என கோரியிருந்தார்.
  இந்த வழக்கு விசாரணையின்போது, அனந்தசரஸ் குளத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த தேவையில்லை. இயற்கையாகவே இந்த குளத்தில் உள்ள மீன்கள் உள்ளிட்ட பிற நீர்வாழ் உயிரினங்கள் குளத்தை சுத்தமாக பராமரித்துக் கொள்ளும் என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குளத்தில் உள்ள மீன்களுக்கு பொதுமக்கள் பொரி உள்ளிட்ட பொருள்களைப் போடுவதால் தான் குளத்தில் நெகிழிக் குப்பைகள் சேர்கின்றன. எனவே மீன்களுக்கு பொரி உள்ளிட்டவைகளைப் போட தடை விதிக்கப்படும். 24 மணி நேரமும் குளத்தைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். அனந்தசரஸ் குளத்தில் இருந்து நீரை எடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். தற்போது கூட அனந்தசரஸ் குளத்திலிருந்து மண் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் அறிக்கை இன்னும் 4 நாள்களில் கிடைத்து விடும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
  அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சலீம், அனந்தசரஸ் குளத்தில் ஊற்றப்போகும் நீரின் தன்மை குறித்த மாதிரிகள் சேமிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுதொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 19-ஆம் தேதி தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிலை குளத்துக்குள் வைக்கப்பட உள்ள நிலையில், ஆய்வு அறிக்கையை வரும்  19-ஆம் தேதி தாக்கல் செய்வதால் என்ன பயன் என கேள்வி எழுப்பி, ஆய்வு அறிக்கையை வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்16) தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
  அப்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர், அண்ணா பல்கலைக்கழகம் சுத்தமான காவிரி நீரைக் கொண்டு குளத்தை நிரப்பலாம் என பரிந்துரை செய்துள்ளது. மேலும் கோயிலின் ஆழ்துளை கிணற்று நீரை கொண்டோ, கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்து நீரைக் கொண்டோ அனந்தசரஸ் குளத்தை நிரப்ப முடியும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த நீராக இருந்தாலும் அதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai