Enable Javscript for better performance
சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

  

  சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து

  By DIN  |   Published on : 15th August 2019 02:05 AM  |   அ+அ அ-   |    |  

  ramadoss


  நாட்டின் சுதந்திரத் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  கே.எஸ்.அழகிரி: கடந்த  5 ஆண்டுகளாக ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக நடந்துவரும் எதேச்சதிகார, மக்கள் விரோத ஆட்சியின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.  இந்த நிலை மாற பெற்ற சுதந்திரத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் பேணிக்காத்திட ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும். 
  ராமதாஸ் (பாமக): வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லாத இந்தியா தான் உண்மையான  விடுதலை பெற்ற நாடாகும்.  நாட்டில்  அமைதி, வளம், செழிப்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவற்றை பெருக்க இந்தியாவின் 73-ஆவது விடுதலை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
  விஜயகாந்த் (தேமுதிக): சுதந்திரம் அடைந்து 73-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தியா,  பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், போன்ற அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வல்லரசு நாடாக ஆவதற்கு சாதி, மதம், இன பாகுபாடின்றி, ஒற்றுமையும், அமைதியும், முன்னேற்றமும் ஏற்படவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர தினநாள் வழி வகுக்கட்டும்.
  கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): விடுதலை பெற்ற இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களும், பண்பாட்டு விழுமியங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், மொழி வழி மாகாணங்கள் அமைய வேண்டும் என்ற தீர்வை முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகிய மாண்புகளையும், மத நல்லிணக்கம் உள்ளிட்ட மரபுகளையும் உயர்த்திப் பிடிக்க பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்திட இந்த நாளில் உறுதி கொள்வோம்.
  ஜி.கே.வாசன் (தமாகா): நாடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், தீவிரவாதம் போன்றவை நம் முன்னே உள்ளன.  இந்தியர்களாகிய நாம் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், ஏழை, எளிய மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும் வகையிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  அன்புமணி (பாமக): ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்த நாட்டு மக்கள், ஆக்கப்பூர்வமான விஷயங்களில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுவதில்தான் உள்ளது.  மதுவை ஒழித்து, மனித நேயத்தை வளர்த்தெடுக்கும் நாள் தான் தமிழக மக்களுக்கு  உண்மையான விடுதலைநாள் ஆகும்.
  எம். தமிமுன் அன்சாரி,எம்எல்ஏ  (மனிதநேய ஜனநாயகக் கட்சி): நம் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த விடுதலைப் போராளிகளின் தியாகத்தை அனைவரும் நினைவுகூருவோம்.  தேசத்தந்தை காந்தியடிகள் வலியுறுத்திய வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாசாரமே இந்திய ஒற்றுமையைக் கட்டிக்காத்து வருகிறது என்பதை நினைவில் கொள்வோம்.
  ஜனநாயக மாண்புகளுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய கொள்கைகளுக்கும் எதிரான செயல்பாடுகளை, காந்தியடிகளின் அஹிம்சை வழியில் வீழ்த்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட முன் வர வேண்டும்.
   

  kattana sevai