சுடச்சுட

  

  பராமரிப்பின்றி உள்ள வள்ளலார் பயன்படுத்திய கிணறு: சன்மார்க்க அன்பர்கள் வேதனை

  By DIN  |   Published on : 15th August 2019 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  valalar


  வடலூர் சத்திய தர்மசாலை அருகே உள்ள வள்ளலார் பயன்படுத்திய கிணறு பராமரிப்பின்றி குப்பைகள் போடப்பட்டுள்ளதால், சன்மார்க்க அன்பர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
  சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார்,  வடலூர் மக்களிடம் இருந்து சுமார் 80 காணி நிலத்தை பெற்று, அதில் 23.5.1867-ஆம் ஆண்டு தருமச்சாலையை தொடங்கி பசிப்பிணியைப் போக்கியவர். இவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்றளவும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இவர், கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். புலால் உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்காமல் சமாதி வைக்க வேண்டும். பசித்தவர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாமல் உணவளிக்க வேண்டும் என்ற கொள்கையை உபதேசித்தவர். வடலூரில் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞானசபைக்கு தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும்  சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்து ஜோதி தரிசனம் செய்கின்றனர். தருமச்சாலையில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னம் வழங்கப்படுகிறது.
  இத்தகைய பெருமை பெற்ற வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில், தருமச்சாலை அருகே வள்ளலார் பயன்படுத்திய கிணறு இன்றளவும் வற்றாமல் தெளிந்த தண்ணீருடன் காணப்படுகிறது.  இந்தக் கிணற்று நீரில்தான் வள்ளலார் குளித்து வந்ததாகவும், பச்சிலை மூலிகைகள் கலந்துள்ளதால் கிணற்று நீரில் குளிப்பவர்களின் பிணிகள் தீரும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற கிணற்றைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால், முறையாக அதை பராமரிக்காததால் கிணற்றில் காலணிகள், குப்பைகள், நெகிழிப் புட்டிகள் கிடக்கின்றன. 
  வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கிணற்றைக் கண்டு மனவேதனை அடைகின்றனர். எனவே, வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் வள்ளலார் பயன்படுத்திய கிணற்றை தூய்மைப்படுத்தி, குப்பைகள் போடாதபடி கிணற்றின் மேல் இரும்பு வலை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai