சுடச்சுட

  
  Palani-Panchamirtham


  திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய், பேரிச்சம்பழம், கற்கண்டு ஆகிய இயற்கையான பொருள்களைக் கொண்டு  பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.
  புவிசார் குறியீடு: குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருள்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருள்களோ தனித்துவம் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
  அந்த வகையில், பழனி தண்டாயுதபாணி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி,  இந்திய புவிசார் குறியீடு ஆணையத்திடம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தனர். இதையேற்று பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என மத்திய புவிசார் குறியீடு துறையின் துணைப் பதிவாளர் சின்னராஜா ஜி.நாயுடு தெரிவித்தார்.
  தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள் என 30 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai