சுடச்சுட

  

  புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு காலதாமதம்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 15th August 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  narayanasamy


  புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
  இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  சிபிஎஸ்இ தேர்வில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுக் கட்டணங்களை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.350-இல் இருந்து ரூ.1,2,00-ஆகவும், பொதுப் பிரிவு, ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ.750-இல் இருந்து ரூ.1,500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.
  அதேபோல, 2018 - 19-ஆம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், அதைத் தற்போது ரூ.2,936 கோடியாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
  நேரு, வல்லபபாய் படேல் ஆகியோர் அளித்த வாக்குறுதிகளை மீறி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. காஷ்மீர் மக்களிடம் கருத்துக்கேட்காமல் அரசியல் சட்டப் பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை நீக்கியது ஜனநாயகப் படுகொலை.
  காஷ்மீரில் நிலம் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்து அந்த மாநிலத்தின் சிறப்புத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள காஷ்மீரில் எதிர்காலத்தில் விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும்.
  சட்டப்பேரவையுடன் கூடிய புதுவை யூனியன் பிரதேசத்துக்கு பொருந்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 239ஏ-இன்படி, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  அந்த யூனியன் பிரதேசத்தை மாநிலமாகக் கருதி, 15-ஆவது நிதிக் குழுவில் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுவையை மத்திய நிதிக் குழுவில் சேர்க்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கோப்பு 20 நாள்களுக்கும் மேலாக மத்திய அரசிடம் உள்ளது. உள்துறையிடம் ஒப்புதல் பெற்று தற்போதுதான் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பேசியும் காலதாமதம் ஏற்படுகிறது. மத்திய அரசு காலதாமதம் செய்வதால், புதுவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததை ஏற்க முடியாது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன் கருத்துக்கூற வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai