நெல்லை வீரத் தம்பதியை பாராட்டும் டிஜிபி சைலேந்திரபாபு

நெல்லையில் கொள்ளையர்களை அடித்துவிரட்டிய வீரத் தம்பதியை தமிழக ரயில்வே காவல் துறைத் தலைவர் சி.சைலேந்திரபாபு பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
நெல்லை வீரத் தம்பதியை பாராட்டும் டிஜிபி சைலேந்திரபாபு


சென்னை: நெல்லையில் கொள்ளையர்களை அடித்துவிரட்டிய வீரத் தம்பதியை தமிழக ரயில்வே காவல் துறைத் தலைவர் சி.சைலேந்திரபாபு பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 
நீங்களும் உங்களது துணைவியாரும், கொள்ளையர்களை திருப்பித் தாக்கி விரட்டியடித்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.

உங்களுடைய வீரமும் உங்கள் துணைவியார் செந்தாமரை அவர்களுடைய துணிச்சலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் செயல் ஒரு ஊக்கமூட்டும் முன் உதாரணமாக உள்ளது.

பொதுமக்கள் உங்களது வீரதீரச் செயலை போற்றுகிறார்கள். காவல்துறை உங்களது துணிச்சலைப் பாராட்டுகிறது.

ஆபத்தான ஆயுதமேந்திய இரண்டு கொள்ளையர்களிடம் இருந்து விடுபட்டு அவர்களையே திருப்பியடித்து விரட்டிய உங்களுளையும் துணைவியையும் நானும் பாராட்டுகிறேன். தொலைபேசியில் பேசிவிட்டேன். நேரிலும் வந்து சந்திக்கிறேன் என்று தமிழக ரயில்வே காவல் துறைத் தலைவர் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (72). இவர் தனது மனைவி செந்தாமரையுடன் (65) பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இத்தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி திருடர்களிடம் கடுமையாகப் போராடிய நிகழ்வு வலைதளங்களில் வைரலாகப் பரவியது.  இச்சம்பவத்தில், செந்தாமரை அணிந்திருந்த 37 கிராம் தங்கத் சங்கிலியைப் பறித்துக்கொண்டு திருடர்கள் தப்பிவிட்டது தெரியவந்தது. 

இதுகுறித்து,  திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சரவணன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு: 
கடையம் காவல் நிலைய சரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாக இருந்த முதியவர்களை குறிவைத்து இரு முகமூடி திருடர்கள் திருட முயன்றபோது, அந்த தம்பதி தீரத்தோடு போராடி அவர்களை விரட்டியுள்ளனர். ரத்தக் காயம் ஏற்பட்ட போதும் விடாமல் போராடி கையில் கிடைத்த பொருள்களை கொண்டு கொள்ளையர்களை தாக்கிய செந்தாமரை அம்மாள் வீரப்பெண்மணி. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளார் . விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர். 

முதியோர் பாதுகாப்புக்கு....வீடுகளிலும் , சாலையை நோக்கியும் தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வீட்டைச் சுற்றி போதுமான வெளிச்சம் கொடுக்கும் விளக்குகளை பொருத்த வேண்டும்.  இதுபோன்ற சம்பவங்களின் போது பர்கிளர் அலாரத்தை உபயோகப்படுத்தலாம்.  பகல் வேளைகளில் வீடுகளை நோட்டமிட்ட பின்னர் இரவில் திருட முற்படுவர். எனவே பகல் நேரத்தில் அன்னிய சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் காவல்துறைக்கு (100) தகவல் தெரிவிக்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com