பதப்படுத்தும் நிலையங்களின் பராமரிப்பு: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் அளிப்பு

அழுகும் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையங்களின் பராமரிப்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் அளிப்பதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை அளித்தார். 
நெடுஞ்சாலைத் துறை சார்பில்  கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
நெடுஞ்சாலைத் துறை சார்பில்  கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 


அழுகும் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையங்களின் பராமரிப்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் அளிப்பதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை அளித்தார். 
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பழங்கள், காய்கறிகள், பிற அழுகும் பொருள்களின் விநியோகத் தொடர்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்த விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், விளைபொருள்களை சுத்தம் செய்து வகைப்படுத்தி தரம்பிரிக்கும் வசதிகளுடன் 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் பதப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதனக் கிடங்கு, சேமிப்புக் கிடங்குகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், கதிரியக்கக் கூடம், நீராவி சுத்திகரிப்பு வசதி போன்றவை சில முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த நிலையங்களைப் பராமரிக்க உழவர் உற்பத்தி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி முதல் கட்டமாக 25 நிலையங்கள் பராமரிக்கப்பட உள்ளன. அவற்றில் 13 நிலையங்களைப் பராமரிப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை அளித்தார்.
புதிய பாலங்கள் திறப்பு: நெடுஞ்சாலைத் துறை சார்பிலான புதிய திட்டங்களை காணொலிகாட்சி மூலம்  முதல்வர் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம்,  பொருந்தல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய ஆற்றுப் பாலம், திருவண்ணாமலை அனக்காவூர் ஏரி, ஈரோடு மாவட்டம் கொளப்பலூர், கரூர் மாவட்டம் நந்தனூர், கோவை மாவட்டம் அன்னதாசம்பாளையம் ஆகிய இடங்களில் ஓடையின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் நரியாறு ஆறு, ஆவுடையார்கோவில் கண்மாய், கமலக்குடி கண்மாய், பட்டமுடையான் கல்லணை கால்வாய் பிரிவு வாய்க்கால், மதுரை குண்டாறு ஆறு, திண்டுக்கல் மாவட்டம் வரட்டாறு, வேலாயுதம்பாளையம் காட்டோடை, சிவகங்கை மாவட்டம் உருவாட்டி ஓடை, ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் ஓடை ஆகிய இடங்களில் புதிதாக ஆற்றுப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், சிறுதையூர்-கொள்ளிடக்கரை சாலை ரயில்வே கடவுக்குப் பதிலாக காட்டூர்-லால்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே மேம்பாலமும், ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை-பரமக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தையும் முதல்வர் திறந்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com