மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 28 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 1997-ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருவாரூர் மாவட்டம் உதயமானது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு 2004-ஆம் ஆண்டு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்குவதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்து, அதற்கான நிர்வாக ரீதியான பணிகளையும் மேற்கொண்டது. அப்போது சுனாமி சீற்றம் ஏற்பட்டதன் காரணமாக அப்பணி முடங்கிவிட்டது. 
மீண்டும் தமிழக அரசு 2013 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமைக்க வருவாய்த்துறை நிர்வாகம் ஆணையர் மூலமாக, நாகை மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது மாவட்ட நிர்வாகம் மூலம், மாவட்டத்தைப் பிரிப்பதற்கான பரிந்துரை வருவாய்த்துறை நிர்வாக ஆணையரிடம் அளிக்கப்பட்டது. பின் தொடர் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல், மீண்டும் முடக்கப்பட்டுவிட்டது.
இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மயிலாடுதுறை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 மயிலாடுதுறை பகுதியின் அன்றாட பிரச்னைகளையும், குறைகளையும் எடுத்துரைக்கவும், நிவர்த்தி செய்துகொள்வதற்கும் காரைக்காலை கடந்து பல கிலோமீட்டர் சென்று நாகை மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே, அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com