சுடச்சுட

    

    வேலூர் மாவட்டம் 3-ஆகப் பிரிப்பு: சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    By DIN  |   Published on : 16th August 2019 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cm4

    73- ஆவது சுதந்திர தினத்தை யொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


    தமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயருகின்றன.

    நாட்டின் 73-வது சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூன்றாவது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். இதற்காக தனது இல்லத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அவர், காலை 8.47 மணியளவில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகே வந்து சேர்ந்தார். அவரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் மோட்டார் சைக்கிள் வீரர்கள் புடைசூழ வரவேற்று அழைத்துச் சென்றனர். கோட்டை கொத்தளம் அருகே வந்த அவர், பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்புகளைப் பார்வையிட்டார்.  அதன்பின், முதல்வரை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    முப்படை உயரதிகாரிகள், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், கோட்டை கொத்தளத்துக்குச் சென்ற முதல்வர் சுமார் 150 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்த உரையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது போன்ற பல்வேறு விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார். விருது பெற்ற அனைவரும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    அதன்பின், கோட்டை கொத்தளத்தில் இருந்து கீழே இறங்கிய முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 
    முன்னதாக, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  சுதந்திர தின உரையாற்றும்போது  வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன் விவரம்:
     2 புதிய மாவட்டங்கள்-ஒரு தாலுகா: பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்தது. அதன்படி நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும்.
    வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வழித்துணையான்குப்பம் எனப்படும் கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகா ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

    13 தாலுகாக்கள்: வேலூர் மாவட்டம் 13 தாலுகாக்களைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் 11 நகராட்சிகளும், 16 பேரூராட்சிகளும் உள்ளன. இதில், வேலூர் மாவட்டமானது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று கோட்டங்களாக உள்ளன.
    முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு மூலமாக இந்த மூன்று கோட்டங்களும் மாவட்டங்களுக்கான அந்தஸ்தை பெறவுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு ஆகிய தாலுகாக்கள் உள்ளன. ராணிப்பேட்டை கோட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, நெமிலி ஆகிய தாலுகாக்களும், திருப்பத்தூர் கோட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி என வேலூர் மாவட்டத்தில் 13 தாலுகாக்கள் அடங்கியுள்ளன.
    இந்த தாலுகாக்களில் அதிகபட்சமாக ஆற்காடு தாலுகாவில் மட்டும் 102 வருவாய் கிராமங்களும், காட்பாடியில் 85 வருவாய் கிராமங்களும், வாலாஜாவில் 83-ம், ஆம்பூர், நெமிலியில் தலா 77 வருவாய் கிராமங்களும் உள்ளன. தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.குப்பத்தில் 39 கிராம ஊராட்சிகள் உள்ளன.

    தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்
    வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேலூர் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு பகுதியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்கள் நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தைப் பிரிப்பதற்கான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது என்றார். இந்நிலையில், வேலூர் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே அந்த மாவட்டத்தைப் பிரிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார். 

    இதுவரை 5 புதிய மாவட்டங்கள்

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையிலான காலத்தில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்துக்கான அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.
    இதேபோன்று, நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தையும் உருவாக்குவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்புகளால் தமிழகத்தில் புதிய மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.
    இப்போது வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். 
    இந்த அறிவிப்பால் தமிழகத்தில் மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35-லிருந்து 37-ஆக அதிகரிக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai