ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: மீண்டும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

முறைகேடுகள் காரணமாக  ரத்து  செய்யப்பட்ட  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை மீண்டும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 2 அல்லது 3 மாதத்தில் விரிவுரையாளர்


முறைகேடுகள் காரணமாக  ரத்து  செய்யப்பட்ட  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை மீண்டும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 2 அல்லது 3 மாதத்தில் விரிவுரையாளர் தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு  அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளை அடுத்து ஆசிரியர் தேர்வு  வாரியம் போட்டித் தேர்வு நடத்த அறிவித்தது. இதன்படி, 2017 செப்டம்பர் 16-ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்  2 ஆயிரம் பேருக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.  அதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டித் தேர்வின் விடைத்தாள்களை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் இருக்கிறது. 
இந்தநிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கண்ட போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விரிவுரையாளர்  தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  
அதேநேரத்தில் 1, 058 காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டில் பலர் ஓய்வு பெற்றதால் காலிப்பணிடங்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், கூடுதல் பணியிடங்களுக்கும் சேர்த்து போட்டித் தேர்வு நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தற்போது  கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய காலிப்பணியிடங்களையும் சேர்த்து தேர்வு நடத்தத் தயாராகி வருகிறது. விரைவில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி 3 மாதங்களில் இந்த தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. 
கடந்த முறை நடந்த தேர்வில் ஏற்பட்ட முறைகேடு மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில் எந்த குளறுபடியும் இல்லாமல் இந்த தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் இந்த தேர்வை நடத்துவது  என்றும், தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படும். விடை எழுதி முடித்த பிறகு அவர்கள் விடைத்தாள்கள் கணினி மூலமாக கணினியில் சேமித்து வைக்கப்படும். அதனால் யாரும் அதில்  முறைகேடுகள் செய்ய வாய்ப்பு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com