
தமிழகத்தில் பால் விலை உயர்வால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனவே பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய விலை உயர்வால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனவே பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சியினர் தான் அரசியல் ஆக்குகின்றனர். தமிழக அரசு மக்களின் நலன் கருதி கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பேசி வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. திமுகவில் கருணாநிதிக்கு இணையான தலைவராக மு.க.ஸ்டாலின் இல்லை. அதிமுக, திமுக என எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழ்மொழியை சுட்டிக்காட்டி என்றும் பேசியதில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியது தமிழர்களுக்கு பெருமை அளிக்கிறது. தமிழகத்தில் எந்தவொரு மொழித்திணிப்பையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றார்.