3 மாதங்களுக்குள் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துக் கட்டடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என
மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த  ஆய்வுக்கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த கையேட்டை வெளியிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 
மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த  ஆய்வுக்கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த கையேட்டை வெளியிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 


தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துக் கட்டடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது மற்றும் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து உள்ளாட்சி அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முழுமையாக அமைப்பது குறித்து பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சிப் பகுதியில்  இதுவரை 2.35 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. இதில், 60,461 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாதது கண்டறியப்பட்டு, அவற்றில்  வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  232 பாழடைந்த கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை நீங்கலாக 14 மாநகராட்சிகள்,  121 நகராட்சிகளுக்கு உள்பட்ட 47.85 லட்சம் கட்டடங்களில் 15.89 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 10.19 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் புனரமைக்கவும்,  4.96 லட்சம் கட்டடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில் குளங்கள் உள்பட 1,786 குளங்களில் 773 குளங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர் நகராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 5 நீர்நிலைகளில் உள்கட்டமைப்பு, இடைவெளி நிரப்புதல் நிதியின்கீழ் ரூ.6.14 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் ரூ.14.98 கோடி மதிப்பிலும், ஈரோடு மாநகராட்சி மற்றும் அரியலூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் சாத்தூர் ஆகிய 6 நகராட்சிகளில் உள்ள 42 நீராதாரங்களில் புனரமைப்புப் பணிகள்  ரூ.38.24 கோடி மதிப்பில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன்  நடைபெறுகிறது.

3 மாதம் அவகாசம்: மாநிலத்தில் உள்ள  அனைத்து அரசுக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களிலும்  3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் என்றார். முன்னதாக, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்த கையேட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி,  ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா,  நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ. 500 கோடியில் குளங்கள் தூர்வாரல்
சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.308 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சியில் 8 நீர்நிலைகளில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, அதில் 3 பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.10.25 கோடி மதிப்பில் 2 நீர்நிலைகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 528 பேரூராட்சிகளில் 26.60 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன. 
ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள், கால்வாய்களின் குறுக்கே  ரூ. 312 கோடி மதிப்பில் 10,000 தடுப்பணைகள் கட்டும் பணியும்,  மாநில நிதியின் மூலம் 5,000 சிறுபாசன ஏரிகளும், 25,000 குளங்கள், குட்டைகள் ரூ.500 கோடி மதிப்பிலும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள மதகுகள் உள்ளிட்டவை ரூ.750 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com