5 லட்சம் முதியோருக்கு புதிதாக ஓய்வூதியம்: சிறப்பு குறைதீர் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 5 லட்சம் முதியோருக்குப் புதிதாக ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மேட்டூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சேலம் வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு குறைதீர் திட்டத்தை தொடக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 
சேலம் வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு குறைதீர் திட்டத்தை தொடக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 


தமிழகத்தில் 5 லட்சம் முதியோருக்குப் புதிதாக ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மேட்டூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேட்டூர் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வரின் சிறப்புக் குறைதீர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார்.  அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்றார். 
 தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.  பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.  

பின்னர், விழாவில் முதல்வர் பேசியது:
மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால்தான் பல நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்க நேரடியாக கிராமங்கள்,  நகரங்களில் வார்டுகளுக்குச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 
அதன் பிறகு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் குழு வார்டுகளுக்குச் சென்று மனுக்களைப் பெறுவர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தப்படும்.  இம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும். 
செப்டம்பர் மாதத்தில் அந்தந்தப் பகுதி அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட்டு,  அடிப்படை வசதிகள் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்படும். 
தமிழகத்தில் தகுதியான முதியோர் 5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  
மேட்டூர் உபரிநீரை ரூ.565 கோடி மதிப்பில் 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் முதல்வர்.
பின்னர்,  ஊரக வளர்ச்சித் துறை,  கூட்டுறவுத் துறை,  வேளாண் துறை,  வருவாய்த் துறை உள்ளிட்ட 6 துறைகள் மூலம் 558 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 92 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழாவில்,  சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன்,  மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன்,  மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com