சென்னையில் இரவில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல்: ஆர்வமுடன் ரசித்த பொதுமக்கள்

 சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல்,  நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டது போன்று ஒளிர்ந்தது வியப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இரவில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல்: ஆர்வமுடன் ரசித்த பொதுமக்கள்


 சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல்,  நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டது போன்று ஒளிர்ந்தது வியப்பை ஏற்படுத்தியது.

சென்னை பொதுமக்கள் பொழுதைக் கழிக்கும் இடங்களில் திருவான்மியூர் கடற்கரையும் ஒன்றாகும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.

இந்தநிலையில் இரவானதும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைகளில் உள்ள ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடலலைகள்  நீல நிறமாக மாறி காட்சியளித்தன.  இது குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இரவில் கடற்கரையில் குவியத் தொடங்கினர்.  கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் புகைப்படம்,  விடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். 

 இந்த நிலையில், கடல் அலைகள் நீல நிறமாக ஒளிர்ந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து கடல் சூழலியல் ஆய்வாளர்கள் கூறியது:  ஒளிர்தல் என்ற நிகழ்வின் அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது. இயற்கையாகவே பல உயிரினங்கள் ஒளியை உமிழ்வதுண்டு. மின்மினிப் பூச்சிகள், வெப்பத்துக்குப் பதிலாக ஒளியை சக்தியாக வெளியிடுகின்றன.  ஒளி உமிழும் நுண்ணுயிரிகள் கடலில் காணப்படுகின்றன.

அதுதவிர சில புழு இனங்கள் இனப்பெருக்க காலங்களில் ஒளியை உமிழும். ஆழ்கடல்களில் சூரிய வெளிச்சம் அதிகமாகப் படாத இடங்களில் சிலவகை மீன்களும் ஒளியை உமிழும்.

குறிப்பிட்ட சில பருவ காலங்களில், ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும்போதுதான் இந்த ஒளி உமிழ்தல் நடைபெறுகிறது. இது கமர் என்றும் வேறு சில இடங்களில் கவர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை உமிழும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் வலையில் மாட்டிக் கொள்ளும். அப்போது வெளியாகும் ஒளியைக் கண்டு, மீன்கள் தப்பித்து விடும். உணவு சேகரிக்க, வேட்டையாட, எதிரியின் கவனத்தை திசை திருப்ப, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்க்கவும் இப்படிப் பல நோக்கங்களுக்கு ஒளி உமிழும் உறுப்புகள் உதவுகின்றன. இந்த பாக்டீரியாவை உண்ணும் மீன்களின் எச்சத்தில் ஒளி உமிழும் பண்பு மிச்சமிருக்கும். அதுவும் சில நேரங்களில் ஒளி வீசும்.

நீண்ட காலமாக சென்னையில் ஒளிர்வு நடைபெறாமல் இருந்திருக்கலாம். குறிப்பிட்ட சிறிய அளவிலான காலநிலை மாற்றத்தால் நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தொலைதூர பாக்டீரியாக்கள் இங்கு வந்து ஒளிர்ந்திருக்கலாம். பாக்டீரியாக்கள் ஒன்றிணைந்து திட்டுத்திட்டாக இணைந்து ஒளியை உமிழ்ந்ததால் நீல நிறம் ஏற்பட்டிருக்கும்.

இது இயற்கையான நிகழ்வுதான். பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் எண்ணிப் பயம் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com