பிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை 

பிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.


பிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதுவும், நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிஎச்.டி. சேர்க்கைக்கு தகுதி பெறுவர்.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே, பிஎச்.டி. மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றபோதும், பல பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.
இந்தச் சூழலில் நாட்டில் தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அமைத்தது. 
இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்புகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பித்திருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 35 சதவீதம் போலியானவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 2010 முதல் 2015 வரையிலான 5 ஆண்டு கால கட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 11 ஆயிரம் போலி ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது.
இதுபோன்ற காரணங்களால், தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஆராய்ச்சிப் படிப்புகளில் மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்பு சேர்க்கையிலும் பல்வேறு புதிய நடைமுறைகளை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) கொண்டுவர உள்ளது.
நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: அதன்படி, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் எம்.ஃபில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
அந்த நுழைவுத் தேர்வில் 50 சதவீத கேள்விகள் மாணவரின் ஆராய்ச்சித் திறனை சோதிக்கும் வகையிலான கேள்விகளும், 50 சதவீதம் சம்பந்தப்பட்ட பாடத்திலிருந்தும் கேட்கப்பட வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் மட்டுமே, பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். 
மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் யுஜிசி பட்டியலிட்டுள்ள வெளியீடுகளில்  மட்டுமே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். பிற வெளியீடுகளில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இந்த புதிய நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த நடைமுறை தரமான ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும். மேலும், எந்தவொரு ஈடுபாட்டையும் காட்டாமல், தனியார் மையங்களிடம் பணம் கொடுத்து போலியான ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிஎச்.டி. மாணவர்கள் இதுவரை வெளியிட்டு வந்தது இனி கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com