புதிய மாவட்டங்கள் - அரக்கோணம், ஆம்பூர் பகுதி மக்கள் எதிர்ப்பு

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பையடுத்து  அரக்கோணம், ஆம்பூர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களிடையே
புதிய மாவட்டங்கள் - அரக்கோணம், ஆம்பூர் பகுதி மக்கள் எதிர்ப்பு


வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பையடுத்து  அரக்கோணம், ஆம்பூர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
அரக்கோணத்தை,, ராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைக்காமல் காஞ்சிபுரத்துடன் இணைக்கவும், ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்காமல் வேலூர் மாவட்டத்துடனேயே நீட்டிக்கச் செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 
தமிழகத்திலேயே பரப்பளவில் அதிகமுள்ள மாவட்டமாக வேலூர் மாவட்டம் திகழ்கிறது.  மாவட்டத்தின் ஒரு பகுதியான திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு வர சுமார் 120 கி.மீ தூரமும், மற்றொரு பகுதியான அரக்கோணத்திலிருந்து வேலூருக்கு செல்ல சுமார் 100 கி.மீ தூரமும் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, அரசுப் பணி நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்களுக்கு சென்று வர பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
இந்த பாதிப்புகளைத் தவிர்த்திடவும், அரசுப்பணிகளை எளிமைப்படுத்திடவும் வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வேலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, இந்த மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு வேலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
எனினும், அரக்கோணம் பகுதி மக்கள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
அரக்கோணம் மக்கள் எதிர்ப்பு: இதுகுறித்து, அரக்கோணம் பகுதி மக்கள் தரப்பில் கூறியது: மக்களவைத் தொகுதியின் தலைமையிடமாக அரக்கோணம் இருந்து வருவதுடன், நாட்டிலேயே அதிகளவில் ரயில் போக்குவரத்து உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், இந்திய பாதுகாப்பு துறையின் முக்கிய  கேந்திரமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம், துணை ராணுவப்படையான மத்திய தொழிற்பாதுகாப்பு  படை பயிற்சி நிலையம், தேசிய பேரிடர் மீட்பு படையின் தென்னிந்தியத் தளம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 
தவிர, ரயில்வே பொறியியல் தொழிற்சாலை, தண்டவாள இணைப்பு தொழிற்சாலை, மின் என்ஜின் பணிமனை ஆகியவற்றை கொண்டிருப்பதுடன், மத்திய அரசின் அஞ்சல் துறையின் கோட்டத் தலைநகராகவும், தமிழக அரசின் பதிவுத்துறை, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியவற்றின் மாவட்டத் தலைநகராகவும் அரக்கோணம் விளங்கி வருகிறது.
இந்நிலையில், தற்போது மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டைக்கும், அரக்கோணத்துக்கும் சுமார் 54 கி.மீ தூரமும், அரக்கோணம் வட்டத்துக்கு உட்பட்ட தக்கோலம், பள்ளூர், புதுகேசாவரம், அணைக்கட்டாபுத்தூர்,  பெருங்களத்தூர், ஆணைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 80 கி.மீ தூரமும் இடைவெளி உள்ளது. 
அதேசமயம், காஞ்சிபுரம் நகரமானது, அரக்கோணத்திலிருந்து சுமார் 30  கி.மீ தூரத்திலேயே இருப்ப தால், அரக்கோணம் வட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைப்பதே இப்பகுதி மக்களின் எதிர்கால நலனுக்கு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆம்பூர் மக்கள் எதிர்ப்பு: இதேபோல், புதிய மாவட்ட அறிவிப்புக்கு ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: 
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆம்பூர், தோல் ஏற்றுமதி தொழிலுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்ற நகரமாகும். தவிர, ஆம்பூரும், வேலூரும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் திருப்பத்தூரைக் காட்டிலும்,  வேலூருக்கு  மிக விரைவில் சென்றுவர முடியும். வர்த்தக ரீதியிலான தொடர்புகளிலும், ஆம்பூர் மக்கள் வேலூரைச் சார்ந்தே உள்ளதால் ஆம்பூர் வட்டத்தை திருப்பத்தூருடன் இணைக்காமல், வேலூர் மாவட்டத்துடனேயே நீட்டிக்கச் செய்திட வேண்டும். 
மேலும், புதிதாக மாவட்டம் பிரிக்கப்படும் நிலையில், ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டத்தை அறிவித்து, இங்கு வருவாய்க்  கோட்டாட்சியர் அலுவலகத்தையும் அமைத்திட வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com