வாகனங்களுக்குத் தகுதிச்சான்று வழங்க பிரத்யேக செயலி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

இ-சலான் திட்டத்தை தொடர்ந்து,  வாகனங்களுக்குத் தகுதிச்சான்று வழங்குவதற்காக பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றார் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மோட்டார் வாகன ஆய்வாளருக்கு இ-சலான் கருவியை வழங்குகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். 
திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மோட்டார் வாகன ஆய்வாளருக்கு இ-சலான் கருவியை வழங்குகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். 


இ-சலான் திட்டத்தை தொடர்ந்து,  வாகனங்களுக்குத் தகுதிச்சான்று வழங்குவதற்காக பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றார் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு இ-சலான் கருவிகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
 மின்னணு வாகனச் சோதனை அறிக்கை கருவி (இ-சலான்) மூலம், வாகன விதிமீறல்கள் மற்றும் இதர அனைத்து நடவடிக்கைகளுக்கான அபராதத் தொகையை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். மேலும், ஒருவரது வாகனம் மற்றும் அந்த வாகன ஓட்டுநர் குறித்த அனைத்துத் தகவல்களும் மென்பொருளில் இடம் பெற்றிருக்கும்.
 வாகனமோ, ஓட்டுநரோ எத்தனை விதிமீறல்கள் அல்லது வழக்கு, அபராதம் அளித்துள்ளனர் என்பதை இக்கருவி மூலம் எளிதில் கண்டறிய முடியும்.  வாகன உரிமத்தையோ, ஓட்டுநர் உரிமத்தையோ இந்த கருவி மூலமாகவே முடக்க முடியும். நிரந்தர தகுதியிழப்பும் செய்ய முடியும்.
 73 போக்குவரத்து குற்றங்களுக்கானத் தண்டனைகள் இந்தக் கருவில் பதிவேற்றப்பட்டுள்ளன. வாகனம், வாகன ஓட்டுநர், குற்றங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை ஆகியவற்றை புகைப்படம் எடுக்கும் வசதியும் இக்கருவியில் உள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் எந்த பகுதியில் எத்தகைய விதிமீறல் செய்தாலும் உடனடியாகத் தெரியவரும். பிற மாநிலத்திலிருந்து வரும் வாகனங்களும் அனுமதிச் சீட்டுக்கான வரியை ஆன்-லைன் மூலம் செலுத்தலாம். தமிழகத்தில் இதுவரை 244 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேவையிருப்பின் கூடுதல் கருவிகள் வழங்கப்படும்.
சாலை விபத்தில் 60 சதவீத உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகிறது. விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதால், கடந்த 6 மாதங்களில் 15% விபத்துகள் குறைந்துள்ளன. நகர்ப்புறங்களில் தலைக்கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் விபத்துகள் குறைந்துவிட்டன. கிராமப்புறங்களில் விபத்துகளை குறைக்க கூடுதல் விழிப்புணர்வு அவசியமானது.

பள்ளிப் பாடங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை விதிகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாலைப் பாதுகாப்பு நிதி ரூ.40 கோடியிலிருந்து ரூ.60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
சாலை விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நிகராக கிராமச் சாலைகளும், நகரச் சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் சாலையில் வாகனங்களைக் கண்காணித்து விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், வழக்குப்பதிவு செய்யும் வகையிலான நவீன கேமராக்கள் பொருத்தும் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்சி) வழங்க பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தபடவுள்ளது. 
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு எடுத்து வராமல், இருந்த இடத்திலேயே செயலி மூலம் வாகனத்தை புகைப்படம் எடுத்து, சான்று வழங்குவது எளிதாக நடைமுறைக்கு வரும் என்றார் அமைச்சர்.

சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, போக்குவரத்துத் துறை ஆணையர் சி. சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆர். மயில்வாகனன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.
இந்த விழாவில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டன.

பேருந்து கட்டணம் உயராது
பால் கட்டணம் உயர்ந்துள்ளதால் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என்பதில்லை. பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. பேட்டரி பேருந்துகள் மத்திய அரசிடம் நிதி பெறப்பட்டு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் முதல்கட்டமாக இயக்கப்படும் என்று  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com