சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கு இந்த கெடுபிடிகள் தேவைதானா? பெற்றோர்களே சொல்லுங்கள்!

  By ENS  |   Published on : 21st August 2019 12:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Chennai-schools

  தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இருக்கும் பல பள்ளிகள் கட்டமைப்பில் சர்வதேச பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.

  ஏசி வசதியுடன் கூடிய வகுப்பறைகள், டிஜிட்டல் முறையில் பாடம் எடுக்கும் முறை என தொழில்நுட்பத்திலும் சரி, உள் கட்டமைப்பிலும் சரி பல மடங்கு முன்னேறி உள்ளார்கள்.

  அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளும் கூட, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடுகிறார்கள். தனித் திறன் கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.

  ஆனால், பள்ளியின் பெயரில் சர்வதேசம், குளோபல் என்றெல்லாம் வைத்திருந்தாலும் கூட சில விஷயங்களில் மட்டும் நமது பழைய கலாச்சாரத்தை பறை சாற்றும் வகையிலேயே மாணவ, மாணவிகளுக்கு விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சில விதிமுறைகளை, மாணவ, மாணவிகள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோரும் வெறுக்கிறார்கள்.

  அதற்கு ஒரு முன்னுதாரணமாக, ஒரு துவக்கப் பள்ளியில் காலையில் வாழ்த்துப் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடல் இவ்வாறு அமைகிறதாம்.

  வேலைக்குச் செல்வது, தூக்குதல், வெட்டுவது போன்ற வேலைகளை ஆடவர் செய்ய வேண்டும், துணி துவைத்தல், சமைத்தல் போன்ற பணிகளை பெண்கள் செய்ய வேண்டும் என்ற வரிகள் இடம்பெறுவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள்.

  குரோம்பேட்டையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவிகள், கட்டாயம் நீளமாக முடி வளர்க்க வேண்டும் என்றும், மாணவர்களை போல முடியை வெட்டிக் கொள்ளக் கூடாது என்று ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், தோள்பட்டை அளவுக்கு முடி இருந்தாலும் அதனை இரட்டை ஜடை போட்டு வர  வேண்டும் என்று மாணவிகளை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

  மாநில  அளவில் முன்னிலையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் எல்கேஜி, யுகேஜி மாணவிகளைக் கூட, ஆசிரியர்கள் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும், கை இல்லாத ஆடைகளை அணியக் கூடாது என்று விதிமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என்று பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள்.

  இதேப்போல 9ம் வகுப்புப் பயிலும் மாணவர் ஒருவர் கூறுகையில், எங்கள் பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக விளையாட அனுமதிப்பதில்லை. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் கூட தனித்தனியாகவே விளையாடுகிறோம். அதிலும் மாணவர்கள் கால்பந்து, கிரிக்கெட், கபடி விளையாடுவோம். மாணவிகள் வாலிபால், கோகோ மற்றும் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளை மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.

  அதுமட்டுமல்லாமல், பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவிகள், மாணவர்களோடு பேசினால் அதற்கு கடும் தண்டனையும் விதிக்கப்படுகிறது. பள்ளி நேரத்தில் இரு பாலினரும் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பள்ளிக்கு வெளியே மாணவர்களோடு பேசும் மாணவிகளை பள்ளி நடத்தும் நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளும் அரங்கேற்றப்படுகிறது என்கிறார்கள்.

  பள்ளி நிர்வாகங்கள் எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள், பிள்ளைகளின் ஒழுக்கத்தை வளர்க்க உதவுமா? அல்லது நாம் இதுவரை கடந்து வந்த பாலின வேறுபாடுகளை மீண்டும் அமல்படுத்த உதவுமா? என்று பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பமே நிலவுகிறது.

  உங்கள் பார்வையில் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? சொல்லுங்கள் பெற்றோர்களே!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai