பேச்சுவார்த்தை தோல்வி: தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்! கண்ணீரில் பொதுமக்கள்

அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி: தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்! கண்ணீரில் பொதுமக்கள்


சென்னை: அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், தனியார் தண்ணீர் லாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் குடிநீர் வாரிய இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் அரசு மற்றும் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் சென்னை கோவிலம்பாக்கத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறைபிடிப்பதும், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உள்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன. தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுகின்றனர். 

தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்களை அன்றைய தினம் முதல் இயக்க போவதில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com