உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தரமான கல்வியை வழங்குவதால் தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் பொன்விழாவில், சக்திதேவி அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் பொன்விழாவில், சக்திதேவி அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


தரமான கல்வியை வழங்குவதால் தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
ஈரோடு, திண்டலில், வேளாளர் கல்வி அறக்கட்டளை, வேளாளர் மகளிர் கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு, வி.இ.டி. கலை, அறிவியல் கல்லூரி கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார்.  அப்போது பொன்விழா மலரை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது:
இளைஞர்களுக்குத் தரமான கல்வி வழங்கினால்தான் மனிதவளம் மேம்பட்டு, தொழில்திறன் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரம் உயரும்; சமூகம் மேம்படும். 
உயர்கல்வி மூலமாகவே திறன் வாய்ந்த இளைய சமூகத்தை உருவாக்க முடியும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்துவார். 
தமிழகத்தில் 829 கலை, அறிவியல் கல்லூரிகள், 718 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், 585 பொறியியல் கல்லூரிகள், 520 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. 
தமிழகத்தில் மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியுடன் அடிப்படை வசதி, சலுகை, உதவித்தொகை ஆராய்ச்சிக்கான வாய்ப்பு, இலவச விடுதி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன. 
இதன் பயனாக கடந்த 2011-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது 32 சதவீதமாக இருந்த உயர்கல்வி தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் உயர்கல்வி பயில்வோர் சதவீதம் 25.8 சதவீதம். தேசிய அளவில் உயர்கல்வி பயில்வோரில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
2018-2019 ஆம் கல்வியாண்டில் 29 பாலிடெக்னிக், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 பல்கலைக்கழகங்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டில் ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்கும் திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ. 460.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
10 பல்கலைக்கழகங்கள், 65 அரசுக் கலைக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 382 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலைக் கல்வி முதலே தரமான கல்வி கிடைக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தேசிய அளவில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து வருகிறது. 
பெண்களுக்கு அதிகமான சமுதாயப் பொறுப்புள்ளது. படிக்கும் பெண்கள், கல்வியுடன், சமூக அக்கறையுடன் நெகிழி ஒழிப்பு, மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பு ஏற்படுத்துதல், சமூகநலம் காத்தல், பெண்கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நான் பவானியில் படித்தபோது ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வருவேன். ஆற்றில் வெள்ளம் வந்தால் பரிசலில் வருவோம். இன்று வசதிகள் உயர்ந்து 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி, இணையதளம் உள்பட படிப்பதற்கு வசதி, வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேநேரம் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில், சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சார்பில், விருட்சம் திட்டம் மூலம் 75  கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை ரூ. 17,09,000-ஐ முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com